கடந்தகாலங்களில் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் சொத்துகள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை இறைவனுக்காக அர்ப்பணித்தல் என்ற பொருள்படும்படி `வக்ஃப்’ எனக் கூறப்படும். இந்தச் சொத்துகளை நிர்வகிக்க, 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் 1958-ம் ஆண்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு, வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதாகத் தெரிவித்திருந்தது. அதனடிப்படியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில், 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராக இடம்பெறுதல், வக்பு வாரியத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல், வக்பு சொத்து தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்தல் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்னர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தன் எக்ஸ் பக்கத்தில், “வக்பு வாரியத்தின் இந்தத் சட்டத் திருத்த மசோதாவெல்லாம் ஒரு சாக்குதானே தவிர வேறு இல்லை. பாதுகாப்புத்துறை, ரயில்வேதுறை, நசுல் நிலம் (காலனித்துவ பிரிட்டிஷ் அரசிடமிருந்து பெறப்பட்ட நிலம்) போன்ற நிலங்களை, பா.ஜ.க-வின் நலனுக்காக விற்பதே இதன் இலக்கு. அந்தச் சங்கிலித் தொடரில் தற்போது இணைக்கப்பட்டிருப்பதே வக்பு நிலம். இந்த சட்டத் திருத்தம் பா.ஜ.க-வின் நலன் கருதி வெளியிடப்பட்டது என்று பா.ஜ.க ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?
வக்பு வாரியத்தின் நிலங்களை எந்தக் காரணத்துக்காகவும் அரசு விற்காது என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். பா.ஜ.க தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனம்போல் செயல்படுகிறது. ‘ஜனதா’ என்பதற்கு பதிலாக, ‘ஜமீன்’என்று சேர்த்து அதன் பெயரை, `பாரதிய ஜமீன் கட்சி’ என மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், ஹிபி ஈடன், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்,“இது ஒரு கொடூரமான சட்டம். அரசியலமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதல். மதச் சுதந்திரத்தை அரசு மீறுகிறது. அதன் மூலம் கூட்டாட்சி அமைப்பைத் தாக்குகிறது. அயோத்தி கோயில் வாரியம் ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வாரியத்தில் இந்துக்கள் அல்லாதவரைச் சேர்க்க முடியுமா… அதேபோல குருவாயூர் தேவஸ்தானத்தில் இந்து அல்லாதவர்கள் சேரலாமா… இஸ்லாமியர் அல்லாதவரும் வக்பு கவுன்சிலில் சேர்க்கப்படலாம் என்ற சட்டத் திருத்தம், மத நம்பிக்கையின் மீதும், சுதந்திரத்தின் மீதும் நேரடித் தாக்குதல். மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் செய்யும் பா.ஜ.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டியும், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து அதையே தொடர்ந்து செய்கிறார்கள்” எனக் கடுமையாகப் பேசினார்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது எதிர்த்து பேசிய திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி சுதீப் பந்தோபாத்யாய்,“இந்த மசோதா பிரித்தாளும் திட்டத்தின் ஒரு பகுதி. அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது” எனக் குறிப்பிட்டார்.
தி.மு.க எம்.பி கனிமொழி, “முதல் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும்போது எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கையில் அரசியல் சாசன சட்டப் புத்தகத்தை எடுத்து வந்தார்கள். அதன் நோக்கம் அரசியல் சாசனத்தைக் காக்க வேண்டும் என்பதுதான். ஆனால், தற்போது நாடாளுமன்றம் அரசியல் சாசனத்துக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது.
தற்போது கொண்டுவரப்படும் வக்பு வாரிய சட்டத் திருத்தம் அரசியல் சாசனம், கூட்டாட்சித் தத்துவம், மதச் சுதந்திரம், சிறுபான்மையினர், மனித இனத்துக்கே எதிரானது. இந்து, கிறிஸ்துவர்களுக்கான அமைப்பின் நிர்வாகத்தில் பிற மதத்தவர் உள்நுழைய முடியுமா… அந்த மத நம்பிக்கை இல்லாதவரை எப்படி அதனுள் அனுமதிப்பீர்கள்… வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மதச் சுதந்திரத்துக்கு எதிரானது. எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்… நமக்கெல்லாம் தெரியும்.
ஏற்கெனவே இந்தியாவின் பல பழைய மசூதிகள் தற்போது பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றன. இந்த நிலையில் வக்பு சொத்துகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுசெய்து முடிவெடுக்கலாம் என்பது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தம் மனித இனத்துக்கே எதிரானது. அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கிய பாதுகாப்பை இது நேரடியாகத் தகர்க்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விளக்கமளித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சியினர் முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். நேற்று இரவு வரை இஸ்லாமியப் பிரதிநிதிகள் என்னிடம் வந்தனர். வக்பு வாரியங்களை மாஃபியா கைப்பற்றியிருப்பதாக பல எம்.பி-க்கள் என்னிடம் கூறினர். சில எம்.பி-க்கள் தனிப்பட்ட முறையில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும், ஆனால் அவர்களது அரசியல் கட்சிகள் காரணமாக அதைக் கூற முடியாது என்றும் கூறியிருக்கின்றனர். இந்த மசோதா குறித்து நாடு தழுவிய அளவில் பல அடுக்கு ஆலோசனைகளை நடத்தியிருக்கிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்துவது சரியல்ல. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை வக்பு வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இப்போது, எம்.பி இந்துவாகவோ அல்லது கிறிஸ்துவராகவோ இருந்தால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்… இப்போது, ஒருவர், எம்.பி என்கிற தகுதியால், வக்பு வாரியத்தில் சேர்க்கப்பட்டால், எம்.பி-யின் மதத்தை மாற்ற வேண்டுமா?
இந்த மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையைப் பறிப்பதையும் மறந்து விடுங்கள். இந்த மசோதா இதுவரை உரிமை பெறாதவர்கள் அதைப் பெறுவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88