நெல்லை, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். வெல்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அதே பகுதியில் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட திட்டமிட்டனர். இதனால், அவர்கள் அருகில் உள்ள ஒருவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு வீட்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி செய்து வந்தனர்.
வீடு கட்டுவதற்காக மாரியம்மாளின் அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து கட்டுமானப் பணிகளை செய்து வந்தனர். இந்த நிலையில், கட்டுமானப் பணிகளைத் தொடர கூடுதலாக பணம் தேவைப்பட்டுள்ளதால், தேவையான பணத்தை ஏற்பாடு செய்யுமாறு மாரியம்மாள், கணவர் செல்வகுமாரிடம் வலியுறுத்தியுள்ளர். இதனால் பணம் ஏற்பாடு செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பணத்தை ஏற்பாடு செய்யச் சொல்லி மாரியம்மாள் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த செல்வகுமாரிடம் பணம் குறித்து கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் கிடந்த கத்தியை எடுத்து குத்திவிடுவதாக மாரியம்மாளிடம் கூறி மிரட்டியுள்ளார். இதனால் மாரியம்மாள் கணவரை கண்டித்துள்ளார். தாய், தந்தை இருவரையும் மூத்த மகன் பரணி சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் ஆத்திரத்தில் மகனை கீழே தள்ளிவிட்டு மாரியம்மாளின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், அலறியபடியே மாரியம்மாள் கீழே விழுந்து உயிரிழந்தார். கீழே தள்ளிவிட்டதில் மகன் பரணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், செல்வகுமாரை கைது செய்த மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.