புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு தன்னுடைய பிரசவத்திற்காக, கிருமாம்பாக்கத்திலுள்ள மகாத்மா காந்தி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற அவர், ஒரு வாரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய அவருக்கு, வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டிருக்கிறது. சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால் ஏற்பட்ட வலி என்று நினைத்த அவர், வலியை பொறுத்துக் கொண்டு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினார்.
ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்த வலியால் துடித்த அவர், 2010 செப்டம்பர் மாதம் அதே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து சாப்பிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படியும் வலி குறையாததால், தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவர் பிரபாவதிக்கு குடல்வால் பிரச்னை இருப்பதாக தெரிவித்ததால், கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி பல்மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அங்கு அவருக்கு அவருக்கு குடல்வால் (appendicitis) அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றை கிழித்தபோதுதான், வயிற்றுக்குள் ஏதோ ஒரு மருத்துவ உபகரணம் இருப்பது தெரிய வந்தது. அங்கு அதை அகற்றும் வசதி இல்லாததால், பிரபாவதியை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அந்த பொருள் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து குடல்வாலும் நீக்கப்பட்டது. பல நாட்களாக அது வயிற்றுக்குள்ளேயே இருந்ததால் கொழுப்பு போன்ற திரவங்கள் மூடியிருந்தது. அப்போதுதான் அது ஆர்ட்ரி ஃபோர்செப்ஸ் (artery forceps – கத்திரிக்கோல் போன்ற கருவி) என்பது தெரிய வந்தது.
அதுகுறித்து பிரபாவதியிடம் மருத்துவர்கள் விசாரித்தபோதுதான், மகாத்மா காந்தி தனியார் மருத்துவமனையில் தனக்கு சிசேரியன் செய்தபோது உள்ளே வைத்து தைத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.10 மாதங்களுக்கு மேல் வலியையும், வேதனையையும் அனுபவித்ததற்கு அந்த மருத்துவமனையின் கவனக்குறைவுதான் காரணம் என்றும், அதனால் அந்த மருத்துவமனை ரூ.10 லட்சம் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வழக்கு நடத்திய செலவுக்காக ரூ.2,50,000/- லட்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆணையம் வழங்கிய அந்த தீர்ப்பில், `கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மனுதாரர் பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தபோது கவனக்குறைவாக, பொறுப்பற்றத் தன்மையில் artery forceps என்ற foreign body-ஐ நோயாளியின் அடிவயிற்றில் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக மனுதாரர் பல்வேறு இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகியுள்ளார். அதனால் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மனுதாரருக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில், தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் வழக்கு செலவுக்காக தனியாக ரூ.20,000/- வழங்க வேண்டும். ஆக மொத்தம் ரூ.7,20,000 லட்சம் ரூபாயை, தீர்ப்பில் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் மனுதாரரான பிரபாவதிக்கு, மகாத்மா காந்தி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும். அப்படி வழங்கத் தவறினால், அந்த தொகையை செலுத்தும் வரை, 9% ஆண்டு வட்டியை கொடுக்க வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.