“நான் தகுதியற்றவன் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்..!” – அவையிலிருந்து வெளியேறிய ஜகதீப் தன்கர்

பாரிஸ் ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற வினேஷ் போகத், இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பத்திருந்தார். ஆனால், அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்ததாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விவாதிக்க வேண்டுமென நேற்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

வினேஷ் போகத்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்த விவகாரம் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. அதைத் தொடர்ந்து, இன்றும் மாநிலங்களவையில் வினேஷ் போகத் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர்,“உங்கள் (எதிர்க்கட்சிகள்) இதயங்களில் மட்டும் இரத்தம் வடிகிறது என்று நினைக்கிறீர்களா… ஒட்டுமொத்த தேசமும் அந்த தகுதி நீக்கம் குறித்த வேதனையில்தான் உள்ளது. ஆனால் அதை பணமாக்குவதும், அரசியலாக்குவதும் அந்த பெண்ணுக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதையாகும். எனவே, இதற்காக இந்த சபையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.” எனத் தெரிவித்தார்.

ஜகதீப் தன்கர் – மல்லிகார்ஜுன கார்கே

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையனை சுட்டிக்காட்டி, “நீங்கள் சபாநாயகரை நோக்கிக் கத்துகிறீர்கள். உங்கள் செயலைக் கண்டிக்கிறேன். அங்கிருந்து சபாநாயகரை நோக்கி கத்துவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்? இது பொருத்தமற்ற நடத்தை.” எனக் காட்டமாக பேசினார். அதைத் தொடர்ந்து “எமர்ஜென்சி எப்படி தொடங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அது நாடாளுமன்ற அமைப்புகளிடம் இப்படியான பொருத்தமற்ற சவாலுடன் தொடங்குகிறது.” எனக் குறிப்பிட்டு பேசினார்.

மாநிலங்களவைத் தலைவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் மேலும் கோபமடைந்த ஜகதீப் தன்கர், “எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததன் மூலம், இந்த நாற்காலியை அவமதித்து விட்டார்கள். நான் இந்த நாற்காலியில் அமர தகுதியற்றவன் என்று அவர்கள் கருதுகின்றனர். எனக்கு சபையில் இருந்து கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை.” எனக் காட்டமாக பேசினார்.

ஜக்தீப் தன்கர்

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன்னைப் பார்த்து சிரித்ததாக குற்றம் சாட்டிய அவர், “என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள்… உங்கள் பழக்கம் எனக்குத் தெரியும்.. இன்றைக்கு எனக்கு வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. இதற்கு பிறக்கும் இந்த நாற்காலியில் உட்காருவதற்கு நான் தகுதியற்றவனாக உணர்கிறேன்.” எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88