மதுரை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த கர்ப்பிணி… பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி பிரவீனா(37). இவர் உறவினரை பார்ப்பதற்காக மதுரை வந்திருக்கிறார். இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுள்ள 4-வது தடத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் அசதியில் படுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து திடீரென எழுந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே தடுமாறி விழுந்துள்ளார். அப்போது வயிற்றில் தண்ணீர் குடம் உடைந்து, ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கீழே விழுந்த வேகத்தில் முகம், கழுத்தில் காயம் ஏற்பட்டு குழந்தை கத்தி அழுதுள்ளது.

குழந்தை

இதை பார்த்து அருகில் உள்ளவர்கள் பதறியடித்து பிரவீனாவையும் குழந்தையையும் தூக்கினார்கள். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயையும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். கர்ப்பமாகி 8 மாதமேயான நிலையில், திடீரென குழந்தை பிறந்த காரணத்தால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கும்போது, “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் ஓய்வறையில் மின்விசிறி வேலை செய்யாத நிலையில் மிகுந்த சோர்வுடன் அங்கு படுத்த உறங்கிய கர்ப்பிணிக்கு, அதிகமாக உடல் வேர்த்து மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும் உடல் நலமில்லாதவர்களும் வந்து செல்லும் இங்கு வசதியான ஓய்வறைகள் வேண்டும். அதுமட்டுமின்றி இங்கு அவசர சிகிச்சை மையம் கூட இல்லாத நிலை உள்ளது. இருந்திருந்தால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்காது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88