அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) முதலில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், அவரின் சமீபகால தடுமாற்றம் காரணமாக வேட்பாளர் பட்டியலிலிருந்து கட்சியால் விலக்கப்பட்டார்.
அதையடுத்து, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறுபுறம், கடந்த முறை அதிபர் தேர்தலில் தோற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இந்தமுறை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் கமலா ஹாரிஸுக்கு அமைதியான முறையில் செல்ல வேண்டும் என பைடன் தெரிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்துடனான நேர்காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்த பைடன், “தாங்கள் தோற்றால் ரத்தக் களரி ஏற்படும் என்பதற்கான அனைத்து விஷயங்களையும் அவர் (ட்ரம்ப்) அர்த்தப்படுத்துகிறார்.
எனவே, எங்களுக்கு நம்பிக்கையில்லை, ட்ரம்ப் தோற்றால் அதிகார மாற்றம் அமைதியாக நிகழ வேண்டும்” என்று கூறினார். முன்னதாக, கடந்த முறை அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதையடுத்து பைடன் வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றபோது கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.