நெல்லை, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செய்யது தமீம். இவர், அங்குள்ள வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சென்டர் நடத்தி வந்தார். பட்டா, சிட்டா நகல், பத்திரப்பதிவு நகல் தொடர்பாக ஆன்லைன் சேவைகளை செய்து வந்தார். இரவில் வழக்கம்போல் சென்டரில் பணிகளை முடித்துவிட்டு, இரவில் வீடு திரும்பிய அவர், உணவருந்திவிட்டு மீண்டும் ஆன்லைன் சென்டரில் சிறிய வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அங்கு சென்றுள்ளார்.
நள்ளிரவில் வெகுநேரம் ஆகியும் செய்யது தமீம் வீடு திரும்பாததால், அவரது தந்தை அமீர் அம்சா, ஆன்லைன் சென்டருக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில், உள்ளே ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் கொடூரமான முறையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அழுது கொண்டே மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செய்யது தமீமின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், நெல்லை மாநகர காவல்துறையின் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கொலையாளிகளை தேடும் பணியும் நடந்தது. அப்போது ஒரே பைக்கில் வந்த 2 பேர் செய்யது தமீமின் ஆன்லைன் சென்டருக்குள் புகுந்து அவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய காட்சியை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், படுகொலை செய்யப்பட்ட செய்யது தமீமுக்கும், நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூரைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கும் சீதபற்பநல்லூரில் நிலம் தொடர்பாக நீண்ட நாளாக பிரச்னை நிலவி வந்ததும், பேச்சிமுத்துவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து செய்யது தமீமை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, சீதபற்பநல்லூரில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த பேச்சிமுத்து மற்றும் அவரது உறவினரான பெருமாள் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.