Wayanad: `வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் ராகுல் வலியுறுத்தல்

கேரளா மாநிலம், வயநாட்டில் கடந்த வாரம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், அவரின் சகோதரி பிரியாங்கா காந்தியும் வயநாடு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.

வயநாடு பேரிடர்

அதில், நாடாளுமன்ற ஜீரோ நேரத்தில் பேசிய ராகுல் காந்தி, “என் கண்களால் நேரில் சென்று பார்த்தேன். பேரழிவு நடந்த பல்வேறு இடங்களையும் பார்வையிட்டேன். சில இடங்களில் முழு குடும்பத்தையும் இழந்து, ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கும் காட்சியும், சில இடங்களில் பெரியவர்களை இழந்து குழந்தைகள் நிர்கதியாக நின்ற காட்சிகளையும் பார்த்தேன். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஏராளமானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டலாம்.

மீட்புப் பணிகளில் உதவிய கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மாநில அரசுகள், மத்தியப் படைகள், ராணுவ வீரர்களின் உதவிக்கு நன்றியும், பாராட்டும். வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவுவதைப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிலச்சரிவுகள் முக்கிய சாலைகளை துண்டித்துவிட்டன. இது நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.

வயநாடு பேரிடர்

எனவே, ஒரு விரிவான மறுவாழ்வுத் தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். வயநாடு இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இதற்குப் பிறகும் இதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில், பேரழிவை எதிர்க்கும் உள்கட்டமைப்பை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை அதிகரிக்கவும் அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார்.