நெல்லை அருகேயுள்ள அருகன்குளத்தில் பிரசித்திபெற்ற எட்டெழுத்துப் பெருமாள் கோயில் உள்ளது. வயல்வெளிகள் சூழ்ந்து காணப்படும் பசுமையான சூழலில் அமைந்துள்ள இந்தக்கோயிலின் பிரமாண்ட கோசாலையில் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கும், கோசாலையில் உள்ள பசுக்களுக்கும் தினமும் இருவேளை பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும், கிருஷ்ண ஜெயந்திவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கிருஷ்ண ஜெயந்தியன்று நடக்கும் சிறப்பு பூஜையில் நைவேத்யங்களை மண் பானைகளில் வைத்து வழிபடுவது சிறப்பு. கடந்த 2004-ம் ஆண்டு முதன் முதலாக 25 மண் பானைகளில் நைவேத்யங்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக 51, 108, 1,008 என மண் பானைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பக்தர்களின் தேவைகள் மற்றும் முன் பதிவிற்கேற்ப பானைகளில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 5 ஆயிரம் பானைகளில் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட உள்ளன.
இதற்கான பிரசாதப் பானைகள் தயாரிக்கும் பணிகளும், அவற்றை அழகுபடுத்தும் பணிகளும் இப்போதே தொடங்கி நடந்து வருகின்றன. பிரசாதப் பானைகளில் அழகுமிக்க ஓவியங்கள் ஒவ்வோர் ஆண்டும் தீட்டப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு கிருஷ்ணரின் முகம், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர், மயில் தோகையில் கிருஷ்ணர், இயற்கை காட்சிகளுடன் இருக்கும் கிருஷ்ணர், சங்கு சக்கரத்துடன் உள்ள கிருஷ்ணர் எனப் பல்வேறு அம்சத்துடன் கூடிய ஓவியங்களுடன் ‘ஹரே கிருஷ்ணா’ என்ற வாசமும் இடம் பெறுகிறது.
ஓவியம் தத்ரூபமாக அமைவதற்காக ‘பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்’ கொண்டு முதலில் ஓவியத்தின் வடிவம் வரையப்பட்டு அதனுள் வண்ணம் தீட்டப்பட்டு நேர்த்தியாக அழகுபடுத்தப்படுகிறது. 10 ஓவியர்கள் மண் பானைகளில் ஓவியங்களைத் தீட்டி வருகின்றனர். இதுகுறித்துக் கோயில் நிர்வாகத் தரப்பில் பேசினோம், “நாட்டிலேயே முதல்முறையாக நெல்லை, அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் மட்டுமே இதுபோன்ற வண்ணமயமான மண்பானைகள் தயார் செய்யப்பட்டு அதில் கிருஷ்ணருக்குப் பிரசார நைவேத்யம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்தப் பிரசாத மண் பானைகளில் கிருஷ்ணருக்குப் பிடித்தமான பட்சணங்களான வெண்ணெய், முறுக்கு, தட்டை, சீடை, உளுந்து வடை, லட்டு, ஜிலேபி, அல்வா, பர்பி, மைசூர் பாக், கருப்பட்டி ஏணி படி மிட்டாய், காராச்சேவு, வறுவல் உள்ளிட்டவைகள் இடம் பெறுகின்றன. நெல்லையில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் பணிபுரியும் திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு கோயில் வளாகத்திலேயே இவை தயார் செய்யப்படுகின்றன.
சிறிய பானைகளில் முக்கால் கிலோ பட்சணங்களும், பெரிய பானைகளில் 2 கிலோ மற்றும் 3 கிலோ அளவுக்கு பட்சணங்களும் நிரப்பப்பட்டு பூஜைக்கு வைக்கப்படும். பின்னர், இந்தப் பிரசாதப் பானைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். பிரசாதப் பானைகள் பெற்றிட திருக்கோயில் அலுவலகத்தில் பெயர் முன்பதிவு செய்து டோக்கன் பெறுவது அவசியம். இதற்காக பக்தர்களிடம் பணம் எதுவும் பெறப்படுவதில்லை.” என்றனர்.
நெல்லையைச் சேர்ந்த பக்தர் கண்ணன், “மதுரா நகருக்கு அடுத்தபடியாக ஶ்ரீஎட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில் மனமுருகி வேண்டுவது நிறைவேறுகிறது. வழக்கமாக எல்லா கோயில்களிலும் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் பாரம்பர்ய முறைப்படி மண் பானைகளில் பிரசாதம் வழங்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. அதோடு, பிரசாதப் பானைகளில் ஒவியங்கள் வரையப்பட்டு இருப்பதால் அவற்றை வீட்டின் பூஜையறையில் வைத்துப் பாதுகாக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது” என்கிறார்.