`விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேறுவது ஏன்?’ பி.டி.ஆர் சொல்லும் காரணம்!

மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ‘பசியில்லா உலகம், நிலைத்த பசுமைப் புரட்சிக்கான சர்வதேச கருத்தரங்கின்’ தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் Fisher women connect என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கடலிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களின் விற்பனையில் பெரும்பாலும் பெண்கள்தான் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மீன்களின் விலை, அதை சுத்தப்படுத்தும் முறைகள், பாதுகாக்கும் முறைகள், வானிலை, பேரிடர் எச்சரிக்கை என்று பல விஷயங்களை ஒரே செயலியில் தெரிந்துகொள்வதற்கான வசதிகள் கொண்டது. இதை மும்பை, நபார்டு வங்கியின் சேர்மன் கே.ஜி. சாஜி வெளியிட்டார். செயலியை வெளியிட்டு அவர் பேசியபோது,

நிகழ்வில்

“விவசாயம், கால்நடை, மீன் பிடித்தல் என்ற பல தொழில்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம். இந்தியாவில் 12 மில்லியன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. கடன் பெற்று பல தொழில்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. இவையும் பெண்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகின்றன” என்றார்.

நிகழ்வில்

தமிழ்நாட்டில் உள்ள அலையாத்திக் காடுகள், கடல் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ஜியோ ஏ.ஐ ப்ளூ கார்பன் என்ற பெயரில் ஏ.ஐ அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன். மைக்ரோசாப்ட் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “விவசாயத்தில் பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதை எதிர்கொள்ள உலக அளவிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டியுள்ளது. அரசு, மக்கள், அரசியல் என பல தரப்பிலும் இதுகுறித்தான அறிவு வளர வேண்டும். இதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட காலமாக விவசாயத்தில் இருந்து வருபவர்கள் ‘ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வேளாண் தொழில் பரவாயில்லை. ஆனால், விவசாயிகளின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை’ என்கிறார்கள்.

கண்காட்சியை தொடங்கி வைக்கும் அமைச்சர் பி.டி.ஆர்

இயந்திரமயமாக்கம், ஆட்டோமேஷன் போன்ற காரணங்களால் 3 – 4 மில்லியன் மக்கள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதேபோல பருவநிலை மாற்றம் பெரிய சவாலாக இருந்து வருகிறது. இத்தகைய காரணங்களால் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறுகிறார்கள். இப்படி வெளியேறுபவர்களுக்கு கிராம பகுதிகளில் சரியான வேலை வாய்ப்புகள் இல்லை. அதனால் நகரங்களுக்கு குடி பெயர்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கிறது. இது பருவநிலை மாற்றத்தின் யுகமாக இருக்கிறது. இதை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள் அவசியம். பருவநிலை மாற்றம் ஏன் ஏற்படுகிறது, எப்படி தடுப்பது, அதை கண்டறிவது எப்படி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டியுள்ளது” என்றார்.

கர்நாடக வருமானத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா பேசியபோது, “ஒரு காலத்தில் உணவுத் தேவைக்காக வெளிநாடுகளை எதிர்பார்த்திருந்தோம். இன்று தேவைக்கு அதிகமாக உணவு இருக்கிறது. ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உள்ளது. இந்தியாவில் 85 சதவிகிதம் தண்ணீர் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. சிறுதானியங்களை சாகுபடி செய்தால் தண்ணீர் பெரிய அளவில் தேவைப்படாது. கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் என்றால் அது சிறுதானியங்கள்தான்.

அமைச்சர் பி.டி.ஆர், ஒடிசா மாநில துணை முதல் கனக் வர்தன்

வேளாண்மையில் சிறுதானியங்கள் இருப்பதை போன்றே வாடிக்கையாளர்களிடமும் சிறுதானியங்கள் அமைப்பு முறை இருக்க வேண்டும். நான் 5 ஆண்டுகள் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். சுற்றுச்சூழலில் நிலைத்த தன்மை, விவசாயிகளின் நலன், அறிவியல்பூர்வமான விவசாயம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவில் 40 சதவிகித மக்களுக்கு விவசாயம் நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. விவசாயம் வளர்ந்தால் இந்தியாவின் பொருளாதாரமும் வளரும்” என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தியோ பேசியபோது, “ஒடிசா நெல் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. 1 குவிண்டால் நெல்லுக்கு 3,100 ரூபாய் வழங்கி வருகிறோம். அதேபோன்று சிறுதானியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தேசிய சிறுதானிய இயக்கம் ஒடிசாவில் சிறப்பாக நடைபெறுகிறது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் சிறுதானியங்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன” என்றார்

நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.