“இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதி பூங்காவாக உள்ளது!” – சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“ஒரு ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்வது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்றுதான். அரசாங்கத்தால் ஏற்பட்ட எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. முன்விரோதம், மற்ற பிரச்னை காரணமாக சில அசம்பாவிதங்கள், படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது என்றாலும் அதை தடுக்க வேண்டியது எங்களின் கடமை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யார் யாரெல்லாம் குற்றச் செயலில் ஈடுபடுவார்களோ அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கின்றோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியுமே தவிர, ஒவ்வொருவர் இதயத்திலும் என்ன இருக்கின்றது என்பதை ஊடுருவி சென்று பார்க்க முடியாது. இவர் இவரை கொலை செய்யப் போகிறாரா என்பதை எல்லாம் பார்க்க முடியாது. வஞ்சம் தீர்க்கின்ற செயலில் ஈடுபடுபவர்கள் கொலை செய்வது என்று திட்டம் தீட்டி செயல்பட்டதால் தான் இது மாதிரியான கொலைகள் நடந்துள்ளது. அதை இரும்பு கரம் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கியிருக்கிறார்.

ரகுபதி

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கூறியதற்கு பத்திரிகைகளில் சில விமர்சனங்களும் செய்திருக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத் தவிர எந்த மாநிலத்திலும் எல்லா சம்பவங்களும் அதிகம் தான். தமிழ்நாட்டில் தான் குறைவு. குறைவாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு அதை அமைதி பூங்கா என்று சொல்வதிலே எந்த தவறும் கிடையாது. ஆகஸ்ட் மாதத்தில் நிறைய தொழிற்சாலைகளுக்கான கால்கோள் ஊன்று விழா தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அந்த தொழிற்சாலைக்கு எல்லாம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அப்படி இருக்கிற சூழ்நிலையில் அமைதி பூங்காவாக இருக்கின்ற காரணத்தினால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று எண்ணி தொழிலதிபர்கள் தொழில்களை தொடங்க வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு அமைதி பூங்கா என்பதில் மறு பேச்சே கிடையாது. சிலருக்குள் கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. அந்த கோஷ்டி மோதல்களை தடுத்து நிறுத்துகின்ற செயலை காவல்துறை தீவிரமாக செய்து வருகிறது” என்றார்.