`நல்ல கல்லூரிக்குப் போகணும்’ – வகுப்பறையில் மாணவர்களிடம் நண்பர்போல பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

தென்காசி மாவட்டத்தில், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நடைபெற்றுவரும் நூலகம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென தென்காசி மாவட்டம் வந்தார்.

அமைச்சர் அறிவுரை

பள்ளி கட்டட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

அமைச்சர் அறிவுரை

இதனைத் தொடர்ந்து, கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளிலும் அரசுப்பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் 11-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனித்தார். பின்னர் மாணவர்களிடம் உரையாடிய அவர், நண்பன் போன்ற தோழமையுடன் அவர்களிடம், “படிக்கும்போது வாய்விட்டு சத்தமா படிக்கணும். அப்போதான் நாம ஏதாச்சும் தப்பா படிச்சா தெரியும். இந்த ரெண்டு வருஷம் நல்லா படிச்சு, நல்ல கல்லூரிக்குப் போகணும். அம்மா, அப்பாவோட கஷ்டம் தெரிஞ்சு படிக்கணும்” எனப் பேசி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விடைபெற்றார்.