தமிழக அரசின் TN Fact Check வாட்ஸ்அப் சேனல்… போலி செய்திகளுக்கு எதிரான முன்னெடுப்பு!

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலிச் செய்திகளின் உண்மைத் தன்மையினை கண்டறிந்து, மக்களுக்குத் தரவுகளோடு கொண்டு சேர்க்கும் தகவல் சரிபார்ப்பகம், தமிழக அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ், கடந்தாண்டு முதல் இயங்கி வருகிறது.

உண்மை சரிபார்ப்பகத்தின் மூலம் தமிழக அரசு, அமைச்சகங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள், விபத்துகள் குறித்தான போலி வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் மீது கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திரித்துப் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட பலவற்றுக்கு, ஆதாரங்களோடு பதில் சொல்லி நிரூபித்து மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமாக இயங்கி வருகிறது.

க்யூ.ஆர் கோட்

தகவல் சரிபார்ப்பகத்தின் மூலம் உண்மை சரிபார்ப்பு செய்யப்படும் தகவல்கள் தொடர்பான விவரங்களை, அரசு தனது சமூக வலைதளப் பக்கங்களிலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பிலும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான மக்கள் தகவல் பெறும் இடமாக விளங்கும் வாட்ஸ்அப் செயலியில், சேனல் ஒன்றை தொடங்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சமூக ஊடகங்களில் வெளியாகும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலிச் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, குறிப்பிட்ட க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் இணைந்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயன் கார்த்திகேயன்

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் இலக்கு இயக்குநர் ஐயன் கார்த்திகேயனிடம் பேசினோம்.

“ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களைவிட, வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற சமூக வலைதளங்களை போல், தேடித் தேடி செய்திகளை நுகராமல், எளிமையான முறையில், சிரமமின்றி வாட்ஸ்அப் சேனல் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாகவே தகவல் சரிபார்ப்பகத்தின் வாட்ஸ்அப் சேனல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களுக்குக் கிடைக்கப் பெறும் செய்திகளின் மீதான உண்மைத் தன்மையை சரிபார்க்கும் விதமாக, தகவல் சரிபார்ப்பகத்தின் சார்பில் விரைவில் வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட உள்ளது” என்ற பிரத்யேக தகவலையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.