Vinesh Phogat: “விட்டுக்கொடுப்பவர் அல்ல; முழுநாடும் உங்களுடனே..!” – அரசியல் தலைவர்களின் வார்த்தைகள்

முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார், அவர் தலைமையில் செயல்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக, மல்யுத்த வீரார்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது, பதக்கம் வாங்கி இந்தியாவை உலக அரங்கில் பெருமை படுத்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் காவல்துறையால் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இந்தியளவில் மட்டுமல்லாமல், உலகளவில் பேசுபொருளானது. அந்த போராட்டக்களத்தில் நீதி கேட்டு போராடியவர்களில் ஒருவர் வினேஷ் போகத். அவர் தற்போது பாரிஸில் நடந்து வரும் மல்யுத்தப் போட்டியில், 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார்.

வினேஷ் போகத், மோடி

அதில், தொடர்ந்து மூன்று போட்டிகளில், வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தையும் உறுதி செய்த வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், “வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் குறிக்கோளையும், திறன்களையும்கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.” என வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இறுதிப்போட்டியான இன்று, வினேஷ் போகத் அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவலை இந்திய ஒலிம்பிக்ஸ் சம்மேளனம் உறுதி செய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து வினேஷ் போகத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,“பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது.

திரௌபதி முர்மு

அவரின் செயல் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்துகிறார். அவரது மன உறுதியும், மீண்டு வரும் திறணும் இந்தியாவிலிருந்து வரும் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி, “வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் உந்துசக்தி. இன்றைய பின்னடைவு வேதனை தருகிறது. நான் அனுபவிக்கும் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதேசமயத்தில், தளராத மன உறுதிக்கு நீங்கள் உதாரணம். சவால்களை எதிர்கொண்டு வெல்வது உங்கள் இயல்பு. மீண்டு வாருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” எனவும்,

ராகுல் காந்தி, “உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்பக் காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

ராகுல் காந்தி

இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை கடுமையாக மேல்முறையீடு செய்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல, அவர் மீண்டும் களத்தில் வலுவாக வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது.” எனவும் ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் பின்னடைவு இந்தியர்களின் நம்பிக்கையை நிச்சயமாக உடைத்துவிட்டது. உலக சாம்பியனை தோற்கடித்த பெருமையுடன் பிரகாசிக்கும் அவர், விளையாட்டில் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளார். இந்த ஏமாற்றம் அவரது துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையில் ஒரு விதிவிலக்கு மட்டுமே. இனி அவர் எப்போதும் வெற்றியாளராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களின் வாழ்த்துகளும் ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உலக சாம்பியன்களை தோற்கடித்து, இந்தியாவின் பெருமையாக விளங்கும் வினேஷ் போகத், தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிக்காக சாலையில் போராட்டம் நடத்தியது முதல் ஒலிம்பிக் போட்டியின் உச்ச மேடையை அடைவது வரை அவர் நிறைய கடந்து சென்றிருக்கிறார். அரசு உடனே ஒலிம்பிக் அமைப்பிடம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எங்கள் சாம்பியனுக்கு நீதி கிடைக்க நாங்கள் எப்போதும் உன்னுடன் இருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன. உங்கள் தைரியம் என்றென்றும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் அதிக உறுதியுடன் மீண்டும் அந்த விளையாட்டு வளையத்துக்கு திரும்புவீர்கள் என்றும் நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88