Sheikh Hasina: வங்கதேசத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவரை துரத்திய போராட்டம் – இனி என்ன?!

வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக அது தீவிரமடைந்த காரணத்தால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஷேக் ஹசீனா.

ஷேக் ஹசீனா

தற்போது 76 வயதாகும் ஷேக் ஹசீனா, 2009-ம் ஆண்டிலிருந்து வங்க தேசத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்தார். ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகள் அந்த நாட்டை இவர் ஆட்சி செய்திருக்கிறார்.

வங்கதேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த ஷேக் ஹசீனா,1947-ம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் பிறந்தவர். வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் இவருடைய தந்தை. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டுமென்று நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது.

இந்திரா காந்தியுடன் ஷேக் முஜிபுர் ரஹ்மான்

அந்தக் காலக்கட்டத்தில் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக ஷேக் ஹசீனா உருவெடுத்திருந்தார். 1975-ம் ஆண்டு, ஷேக் ஹசீனாவும், அவருடைய தங்கையும் வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், ஷேக் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் ராணுவ சதியால் படுகொலை செய்யப்பட்டனர். வெளிநாடு சென்றிருந்ததால், ஷேக் ஹசீனாவும், அவருடைய தங்களையும் உயிர் தப்பினர்.

தந்தையும், குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1981-ம் ஆண்டு வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருந்தார். அதன் பிறகு, அவர் சொந்த நாட்டுக்குச் சென்றார். அங்கு, தனது தந்தையின் கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தீவிர அரசியலில் இறங்கினார். அந்த நேரத்தில், ராணுவத் தளபதியான உசேன் முகமது எர்ஷாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சிக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளை ஒருங்கிணைந்த்து ஜனநாயகத்துக்கான போராட்டங்களை நடத்தினார் ஷேக் ஹசீனா.

ஷேக் ஹசீனா

அந்தப் போராட்டங்களின் மூலமாக, வங்கதேச மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக அவர் உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து, 1996-ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். அவரது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் மூலமாக மக்களின் நன்மதிப்பை அவர் பெற்றார். உதாரணமாக, நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் பழங்குடி தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது போன்ற நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.

ஏழ்மை நிறைந்த நாடு என்ற நிலையில் இருந்த வங்க தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவந்த சாதனையாளர் என்றும் அவர் பாராட்டப்படுகிறார். அங்கு, கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் வருமானம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரண்டரைக் கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று உலக வங்கி கூறுகிறது. பாலங்கள் உள்பட நாட்டின் உள்கட்டமைப்புகள் இவரது ஆட்சியில் அதிகரிக்கப்பட்டன.

வங்கதேச போராட்டம் – Bangladesh Violence

அதே நேரம், ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் புறப்பட்டன. அதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் தேசியக் கட்சியிடம் 2001-ம் ஆண்டு தேர்தலில் ஷேக் ஹசீனா தோற்றார். பிறகு, மீண்டும் 2009-ம் ஆண்டு இவர் ஆட்சிக்கு வந்தார். அப்போதிலிருந்து சமீபத்தில் ராஜினாமா செய்யும்வரை ஷேக் ஹசீனாதான், வங்கதேசத்தின் பிரதமராக இருந்தார்.

ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஷேக் ஹசீனா, ஒரு கட்டத்தில் அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியதாக விமர்சிக்கப்படுகிறார். தற்போது, இடஒதுக்கீடு விவகாரத்தால், மாணவர்களின் போராட்டம் வெடித்து, அதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டே அவர் வெளியேறிவிட்டார்.

வங்காளதேசம் – போராட்டம்

ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்குத் திரும்ப மாட்டார் என்று அவரின் மகன் சஜீப் வாஜேத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ஆட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பால் தன் தாய் மிகவும் அதிருப்தியடைந்திருந்ததாகவும், அதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் சஜீப் வாஜேத் கூறியிருக்கிறார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நிச்சயமற்ற சூழல் அந்த நாட்டில் நிலவுகிறது. இந்தச் சூழலில், விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தலைமைத் தளபதி வாக்கர் உஸ் ஸமான் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘வங்கதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் விரைவில் இடைக்கால அரசு அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும்’ என்று வாக்கர் உஸ் ஸமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வங்கதேச போராட்டம்

2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவைத் தோற்கடித்தவர், அவருடைய அரசியல் எதிரியான பேகம் கலீதா ஜியா. ஷேக் ஹசீனாவும், கலீதா ஜியாவும்தான், கடந்த 30 ஆண்டுகளா வங்கதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் தலைவர்கள். கலீதா ஜியாவை பல்வேறு வழக்குகளில் கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தார் ஷேக் ஹசீனா. வீட்டுச் சிறையிலிருந்து கலீதா ஜியா விடுதலை செய்யப்பட்டால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88