Bangladesh: “ஷேக் ஹசினா நாட்டைவிட்டு வெளியேற காரணம்..!” – உடைத்துபேசும் குடும்ப உறுப்பினர்கள்

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. நாடளவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

வங்க தேசம் – Sheik Hasina – ஷேக் ஹசினா

கடந்த ஒருவாரமாகப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வங்கதேச தலைநகர் டாக்காவில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை முற்றுகையிட திரண்டனர். நிலைமை மோசமடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இதற்கிடையில், வங்கதேச பிரதமர் இல்லத்தைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய காட்சிகள், இலங்கை அதிபர் மாளிகை சூரையாடப்பட்டதை நினைவுபடுத்தியது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையங்கள், பிற அரசு கட்டடங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.

ஷேக் ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்க முயன்றனர். டாக்கா நகரம் முழுவதும் ராணுவமும், காவல்துறையும் குவிக்கப்பட்டன. மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்ட பெரும் பதற்றமான சூழல் நிலவியது. நேற்று நடந்த வன்முறை கலவரத்தில் 66 பேர் இறந்ததாக AFP செய்தி நிறுவனமும், வங்கதேச செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் 135 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

வங்கதேச ராணுவத் தளபதி, ‘இடைக்கால அரசை நிறுவ அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

வங்காளதேசம் – போராட்டம்

ஷேக் ஹசினா ராஜினாமாவைத் தொடர்ந்து, ராணுவத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வங்கதேச ஜனாதிபதி சஹாபுதீன், “முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவையும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுவிக்க வேண்டும். இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, புதிய தேர்தல்கள் நடத்தப்படும். அதுவரை தேசிய ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்படும்.” எனக் உத்தரவிட்டிருக்கிறார்.

ஷேக் ஹசீனா 1996-ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்து 20 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். தற்போது அவரின் பதவி விலகல் வங்கதேச அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என வங்கதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷேக் ஹசினாவின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றிய வாஜித், “கடந்த 15 வருடங்களில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை புரட்டிப் போட்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தபோது, ​​வங்கதேசம் ஒரு தோல்வியுற்ற, ஏழை நாடாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று, வங்கதேசம் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நிற்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வங்கதேச ஜனாதிபதி சஹாபுதீன்

ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் ஜாய், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ பிரதமராக ஷேக் ஹசீனா எந்த தவறும் செய்யவில்லை. தனது ஏமாற்றத்தையே அவர் வெளிப்படுத்தினார். நாட்டிற்கு சிறந்த அரசை வழங்கினார். இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார். அவர் தனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார். ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது குடும்பத்தினரான நாங்கள்தான் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வற்புறுத்தினோம். அதனால்தான் புறப்பட ஒப்புக்கொண்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வங்கதேச விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தியை பார்த்தோம். அங்கு நடந்துவரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அமெரிக்கா வங்கதேச மக்களுடன் நிற்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேத்யூ மில்லர்

தற்போது புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள், ஜனநாயக சீர்திருத்தங்கள், சிறந்த வேலை வாய்ப்புகள், கல்வி முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88