‘வன்னியர்களுக்கும் அதிக பலன்‘ – தமிழக அரசின் தரவுகளை ராமதாஸ் மறுப்பது ஏன்?

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், அது தொடர்பான அரசாணை தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

ஸ்டாலின்

அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. அதில், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டை எப்படி வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டிருக்கிறது. வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஷ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளைக் கொடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது’ என்று கூறியது.

ராமதாஸ்

இந்த நிலையில், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்திவருகிறது. ஆனால், ‘மாநில அரசால் சர்வே தான் நடத்த முடியும். மத்திய அரசால்தான் சென்சஸ் நடத்த முடியும். மத்திய அரசால் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புதான், நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்’ என்ற வாதம் தி.மு.க உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.

மேலும், ‘பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவதற்கு மாறாக, மாநில அரசை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சிக்கிறார்’ என்ற கருத்து தி.மு.க தரப்பினால் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், பா.ம.க கோரும் 10,5 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகமாக வன்னியர் சமூகத்தினர் பலனடைந்துவருகிறார்கள் என்ற வாதத்தை தமிழக அரசு முன்வைத்தது. குறிப்பாக, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இது குறித்து வெளிப்படையாகப் பேசினார். அமைச்சரின் கருத்து தவறானது என்று பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்தார்.

இப்படியான சூழலில்தான், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினர் அதிக பலன்களை அடைந்திருக்கிறார் என்ற தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன.

மதுரை உயர் நீதிமன்ற கிளை

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எனும் ஒரு பிரிவை உருவாக்கி, அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு 1989-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இன்றைக்கும் அது நடைமுறையில் இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கியிருக்கும் தகவல்களின்படி, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் என அனைத்திலும் வன்னியர் சமுதாயத்தினரே அதிகமாக தேர்ச்சி பெறுகிறார்கள்’ என்ற அடிப்படையில் புள்ளிவிவரங்கள் அமைந்திருக்கின்றன.

உதாரணமாக, ‘2018 மற்றும் 2022 ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளுக்கு மொத்தம் 24,330 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு மூலம் 4,873 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 2,781 பேர். இது, 11.4 சதவிகிதம். அதேபோல, மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 6,966. இதில், 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வன்னியர் சமூகத்தினர் 940 பேர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது, 10.5 சதவிகிதத்தைவிட கூடுதலாகும்.

பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ் பட்டப்படிபில் மொத்தம் 6,234 இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20 சதவிகித ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10.7 சதவிகிதம் பேர் பெற்றிருக்கிறார்கள். அதேபேல, பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி.எஸ் எனப்படும் பட்ட மேற்படிப்பில் மொதத இடங்கள் 751. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது, 20 சதவிகித இடஒதுக்கீட்டில் 11.2 சதவிகிதம்.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 தேர்வுகளில் 2012-2022 வரை தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 26,784 பேர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். இது, 19.5 சதவிகிதம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வுகளில் மொத்தம் தேர்ச்சிபெற்று நியமனம் பெற்றவர்கள் 2,682 பேர். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரில் மொத்தம் சேர்ச்சி பெற்றோர் 366 பேர். அவர்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியர்கள் 270 பேர். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவிகிதம்.

இதுபோல, காவல் உதவி ஆய்வாளர், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நியமனம், துணை ஆட்சியர்கள் நியமனம், ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நியமனம் என்று பல்வேறு பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் 10.5 சதவிகிதத்தைக் காட்டிலும், அதிகமாகவே வன்னியா சமூகத்தினர் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று அரசின் தரவுகளைச் சுட்டிக்காட்டி தி.மு.க தரப்பினர் கூறிவருகிறார்கள்.

தமிழக அரசின் இந்தத் தரவுகளையும், அதை வைத்து முன்வைக்கப்படும் வாதங்களையும் பா.ம.க ஏற்கவில்லை. ‘முழுமையான விவரங்களை வெளியிடாமல், அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் முதல் தொகுதி பணிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்றவற்றில் வன்னிவர்களுக்கு பிரதிநிதத்துவ குறித்து எந்த விவரமும் தமிழக அரசு வெளியிட்ட தரவுகளில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

ராமதாஸ்

மேலும், ‘தமிழ்நாட்டில் 1989-க்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்துக்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஆனால், அந்த விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை. மாறாக, திடீரென்று வன்னியர்கள் குறித்து புள்ளிவிவரங்களை மட்டும் திரித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலமாக, வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88