சேலம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்து வருகின்றன. இதில் மகளிர் காவல் நிலையங்களும், தனிப்பிரிவு காவல் நிலையங்களும் அடங்கும்.
அப்படி மாவட்ட காவல் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எடப்பாடி காவல் நிலையம், முக்கியமான காவல் நிலையம் ஆகும்.
சமீபத்தில் எடப்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மூன்று காவலர்கள் குட்கா சோதனை செய்து பிடித்ததை தனியாக விற்ற விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் அதே காவல் நிலையத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்தான், தற்போது சேலம் மாவட்டத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், எடப்பாடி காவல் நிலையத்தை நேரில் ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு, மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் அதில் ஏதும் சொத்து பிரச்னை போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை கேட்டு அறிந்துள்ளார்.
ஏற்கனவே தென் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சேலத்தில் காவல் நிலையத்திற்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அரங்கேறி இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.