`வங்கதேசத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு சர்வாதிகாரிக்குமான பாடம் இது!’ – ஃபரூக் அப்துல்லா

வங்காளதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக சமீபத்தில் தேசிய அளவில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடிக்கவே, நிலைமை இன்னும் தீவிரமடைந்தது. இதுவரையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்ட கலவரத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.

ஷேக் ஹசீனா – Sheik Hasina

இதனால், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஷேக் ஹசீனாவுக்கு எதிராகக் குரல்கள் வலுத்தது . ஆனாலும், ஷேக் ஹசீனா பதவியிலிருக்கவே, நேற்று பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முன்னேறினர். அதன் பின்னரே, சூழலின் தீவிரத்தை உணர்ந்த ஷேக் ஹசீனா, போராட்டக்காரர்கள் வருவதற்குள் ஹெலிகாப்டர் மூலமாக நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த சில மணிநேரங்களில் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தைச் சூறையாடினர். தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில்தான் தஞ்சமடைந்திருக்கிறார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இன்று பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஷேக் ஹசீனாவுக்கான அனுமதி தற்காலிகமானது என்றும், அந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், வங்கதேசத்தில் நடந்திருப்பது அந்த நாட்டுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு சர்வாதிகாரிக்குமான பாடம் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கிறார்.

ஃபரூக் அப்துல்லா

வங்கதேசத்தில் நிலவுவது குறித்து இன்று ஊடகத்திடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “ராணுவம் உட்பட யாராலும் கட்டுப்படுத்த ஒரு இயக்கத்தை மாணவர்கள் முன்னெடுத்தார்கள். எனவே இதுவொரு பாடம். ஆனால் , இது வங்காளதேசத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் இது பாடம். உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு நிலவும் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க அவர் தவறிவிட்டார். பிரதமர் இல்லத்திலிருந்து அவர் வெளியேறியிருக்காவிட்டால் அவரும் கொல்லப்பட்டிருப்பார்” என்று கூறினார்.