காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் அடித்துக் கொலை; மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(வயது: 18). இவர், திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள அவருடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அவரின் மாமா மகன் சந்தோஷ்(வயது: 20) என்பவருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் அதிக நீர் வருவதால் அதனை ரசிப்பதற்காக கீதாபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார். இருவரும் கீதாபுரம் பகுதியில் காவிரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த ஐந்து பேர் ரஞ்சித் மற்றும் சந்தோஷ் இருவரையும், ‘நீங்கள் யார், எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்?’ என கேட்டுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரஞ்சித் கண்ணனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித் கண்ணனை, சந்தோஷ் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது ரஞ்சித்துக்கு மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்தை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

குற்றவாளி

அதனைத் தொடர்ந்து, ரஞ்சித் கண்ணனை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீஸார் ரஞ்சித்தை தாக்கியதாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன் என்கிற நவீன் குமார், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்கள் என நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளியான சுரேஷ் என்கிற சுளிக்கி சுரேஷ் (வயது: 26) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். காவிரியை வேடியைக் பார்க்க சென்ற இளைஞர் ஒருவரை, மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.