உச்ச நீதிமன்றம் 75-வது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ஒருவார கால லோக் அதாலத் எனும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தியது. உச்ச நீதிமன்ற வழக்குகளை தீர்ப்பதற்காக, உயர் நீதிமன்றங்களில் நடத்தப்படும் இந்த லோக் அதாலத் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமுக தீர்வு காணவும், மக்களுக்கு நியாயமாகவும், அதே நேரம் விரைவாகவும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படுகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் ஆலோசனையின் அடிப்படையில், முதன்முறையாக ஒரு வார கால சிறப்பு லோக் அதாலத் நடத்துவதற்கு, ஏழு நீதிமன்றங்கள் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த லோக் அதாலத் மன்றம், மாவட்ட, மாநில நீதி மன்றங்களுடன் இணைந்து, நீதிபதி சந்திரசூட் தலைமையில் மதியம் இரண்டு மணிக்கு மேல் நடத்தப்பட்டது. 4,880-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த மக்கள் மன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக திருமணம், சொத்து தகராறுகள், மோட்டார் விபத்து மற்றும் காப்பீட்டு கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல், சேவை தொடர்பான வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி (நேற்று முன்தினம்) லோக் அதாலத்தின் நிறைவு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட், “இழுவையில் இருந்த சில வழக்குகளை முடித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்த லோக் அதாலத் மன்றம் செயல்படுகிறது. லோக் அதாலத்தின் முக்கிய நோக்கம் மக்களின் வீடுகளுக்கு நீதியை எடுத்துச் சென்று மக்களுக்கு அதை நினைவூட்டுவதாகும்.
ஒரு மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வழக்கு முடிவடைந்தால் போதும் என்ற நிலையில், எந்த வகையான தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். அவர்களுக்கான உரிய இழப்பீட்டை வழங்கி லோக் அதாலத் தீர்ப்பளித்தது. இப்படியான வழக்குகள் விரைவாக முடித்து வைக்கப்பட்டன. மக்கள் விரைவான தீர்வை மட்டுமே விரும்புகிறார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.