Bangladesh: சூறையாடப்பட்ட வங்க தேச பிரதமர் மாளிகை… இந்தியாவில் தஞ்சமடைந்த Sheik Hasina!

இரண்டாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அரசுக்கெதிராக வெடித்த போராட்டம், வங்காளதேசத்தில் தற்போது வெடித்திருக்கிறது. வங்காளதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாடளவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், ஒருகட்டத்தில் வன்முறையாக வெடித்தது.

வங்காளதேசம் – போராட்டம்

சுமார் ஒரு மாதகாலம் நீடித்த இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வளவு உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் கடந்த ஒருவாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவந்த நிலையில், இன்று காலை ஆயிரக்கணக்கானோர் தேசிய தலைநகர் டாக்காவில் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை முற்றுகையிட திரண்டனர்.

நிலைமை மோசமடையவே ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், வங்காளதேச பிரதமர் இல்லத்தைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோக்களில், போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திலிருந்த கோப்புகளை கலைத்துப் போட்டனர்.

மேலும் , உள்ளே இருந்த பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது, ஆடு, முயல், வாத்து போன்றவற்றை தூக்கிச் செல்வது, தலையணை, பெட்ஷீட், சூட்கேஸ் போன்றவற்றை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வங்காளதேச பிரதமர் இல்லம்

அதேசமயம், விரைவில் இடைக்கால அரசை நிறுவுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.