Bangladesh: தீவிரமடைந்த இட ஒதுக்கீடு போராட்டங்கள்; நாட்டைவிட்டு வெளியேறினாரா Sheik Hasina?

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பான போராட்டம், வன்முறைக் கலவரமாக வெடித்தது. கடந்த ஒரு மாதமாகவே தொடரும் இந்த போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றன.

ஷேக் ஹசினா

ஊரடங்கு உத்தரவை மீறி, சுமார் 4,00,000 போராட்டக்காரர்கள் வங்க தேசத்தின் தலைநகரில் அணிவகுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தப் பெரும் கூட்டம் வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசினாவின் பிரதமர் மாளிகை இருக்கும் டாக்காவை முற்றுகையிட்டிருக்கிறது.

அதனால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த டாக்காவில் கவச வாகனங்களுடன் ராணுவப் படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளை முள்வேலிகளால் அடைத்துள்ளனர். இதற்கிடையில், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வங்க தேசத்தைவிட்டு வெளியேறி இந்தியா வந்திருப்பதாக வங்க தேச பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன. மேலும், வங்க தேச ராணுவ ஆட்சி அமலுக்கு வரவிருப்பதாகவும் செய்திகள் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், “பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுடனும் நான் பேசுகிறேன். நாங்கள் இடைக்கால அரசை அமைத்து நாட்டை அமைதியான முறையில் நடத்துவோம்…” என்று வங்கதேச ராணுவத் தளபதி வக்கர் உஸ் ஜமான் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கூறியிருக்கிறார்.