போராட்டம் அறிவித்த அண்ணாமலை; விளக்கமளித்த முத்துசாமி.. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் நிலை என்ன?

“அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றாமல் திமுக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி, பா.ஜ.க சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் நிலை குறித்து ஆட்சியர் ராஜ்கோபால் சுன்காரா தலைமையிலான அதிகாரிகளுடன் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் காலதாமதம் ஏற்படுவதற்கு தி.மு.க அரசு காரணம் என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள 6 நீரேற்று நிலையங்கள் உள்ள நிலையில், முதல் மூன்று நீரேற்று நிலையங்களுக்கான நிலம் கையகப்படுத்தாமல் இருந்தது. இந்த நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள், விவசாய சங்கங்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிலத்தைப் பெற்று நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன.

ஆய்வுக் கூட்டம்

இத்திட்டத்துக்கான குழாய்கள் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானதால் சோதனை செய்யும்போது பல இடங்களில் உடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் உள்ள 1,045 குளங்களுக்கும் தண்ணீர் செல்ல சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் தொடக்கத்திலேயே அ.தி.மு.க. அரசு நீரேற்று நிலையங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தி.மு.க அரசால்தான் இந்த திட்டம் தாமதப்படுவதாக திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது.

மழைப் பொழிவு காரணமாக காவிரியிலும், பவானியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இருந்தாலும் சட்டப்படி, தேவைக்குப்போக அதிமுள்ள 1.5 டி.எம்.சி தண்ணீர்தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு எடுக்க முடியும். ஆகஸ்ட் 15-ம் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதன் பிறகு 15 நாள்களுக்குப் பிறகு கசிவு நீர் வரும் என எதிர்பார்க்கிறோம். அதைத்தான் தேவைக்குப்போக மீதமுள்ள நீராக கருத முடியும். இதை மீறினால் கீழ்பவானி பாசனக்காரர்களுக்கு பிரச்னை ஏற்படும். எனவே, இதை மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது.

ஆய்வுக் கூட்டம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டதுக்கு 1,416 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். இதில், சுமார் நூறு பேரிடம் மட்டுமே பணம் வழங்குவது குறித்து பேச வேண்டும். பலருக்கு பணம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக பா.ஜ.க-வினர் கடந்த முறை உண்ணாவிரதம் இருந்தபோது விளக்கம் கொடுத்தேன். தற்போது விளக்கம் கொடுத்துவிட்டேன். எனவே, ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன். கீழ்பவானியில் கசிவுநீர் வந்த பிறகும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் காலதாமதம் ஏற்பட்டால், நானும் அவர்களுடன்கூட போராட தயாராக இருக்கிறேன்” என்றார்.