Trump: `அதுவரையில் கமலா ஹாரிஸ் ஆப்ரிக்க அமெரிக்கர் என தெரியாது!’ – இன ரீதியாக விமர்சிக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இவ்வாறிருக்க தற்போதைய அதிபர் ஜோ பைடனின் சமீபகால தெளிவற்ற மற்றும் தடுமாற்றமான பேச்சு, தளர்வான நடை, உடல்நலம் போன்றவை விமர்சனங்களுக்குள்ளானது. பின்னர், திடீரென ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) முன்மொழியப்பட்டார்.

கமலா ஹாரிஸ்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இருப்பினும், எதிர்முனையில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஜோ பைடனை விடவும் கமலா ஹாரிஸை தோற்கடிப்பது எளிது என கூறிவருகிறார்.

டொனால்ட் ட்ரம்ப்

இருவரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து இன ரீதியாக ட்ரம்ப் பேசியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.

சிகாகோவில் நடைபெற்ற தேசிய ஆப்ரிக்க அமெரிக்க பத்திரிகையாளர் சங்க மாநாட்டில் பேசிய ட்ரம்ப், “நேரடியான பழக்கம் இல்லை என்றாலும், மறைமுகமாக அவரை (கமலா ஹாரிஸ்) நீண்டகாலமாகவே எனக்குத் தெரியும். அவர் இந்திய பாரம்பரியத்தைக் கொண்டவர். மேலும், இந்திய பாரம்பரியத்தை மட்டுமே அவர் ஊக்குவித்துவந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆப்ரிக்க அமெரிக்கராக மாறியபோதுதான் அவர் அந்த இனத்தவர் என்று தெரியவந்தது. அதுவரையில் அவர் ஆப்ரிக்க அமெரிக்கர் என்று எனக்குத் தெரியாது.

தற்போது, அவர் தன்னை ஆப்ரிக்க அமெரிக்கராகவே அறியப்பட விரும்புகிறார். இப்போது அவர் இந்தியரா அல்லது ஆப்ரிக்க அமெரிக்கரா என்று எனக்குத் தெரியவில்லை… இங்கு அனைவரையும் நான் மதிக்கிறேன். ஆனால், அவர் வெளிப்படையாக இல்லை. காரணம், முன்பு அனைத்து வழிகளிலும் இந்தியராக இருந்தவர், திடீரென ஆப்ரிக்க அமெரிக்கராக மாறினார்” என்றார்.

கமலா ஹாரிஸ்

அதோடு, ட்ரம்ப் தனது Truth சமூக வலைதளப் பக்கத்தில் கமலா ஹாரிஸின் பழைய குடும்ப புகைப்படத்தைப் பதிவிட்டு, “பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய அருமையான படத்துக்கு நன்றி கமலா… உங்களின் அரவணைப்பு, நட்பு மற்றும் இந்திய பாரம்பர்யத்தின் மீதான உங்களின் அன்பு மிகவும் பாராட்டத்தக்கது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

மறுபக்கம், ட்ரம்பின் இன ரீதியான பேச்சுக்கு எதிர்வினையாற்றிய கமலா ஹாரிஸ், “நம்முடைய வேறுபாடுகள் நம்மைப் பிரிக்காது என்பதை உணர்ந்துகொண்ட தலைவர்தான் நமக்கு தேவை” என்று ஆப்ரிக்க அமெரிக்க பெண்கள் சங்கத்தின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88