“நானும் என் முன்னோர்களும் கல்வியின் அருமையை உணர்ந்து செயல்பட்டிருக்கிறோம்!” – பி.டி.ஆர் பெருமிதம்

மதுரை திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடைகளை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, `கல்வியும் சுகாதாரமும் என்னுடைய இரண்டு கண்கள்’ என முதலமைச்சர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லி வருகிறார்.

நிகழ்ச்சியில்

நீங்கள் முடிந்த அளவுக்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே எத்தனையோ திட்டங்களை வகுத்து உணவு, உடை, சைக்கிள் இப்போது ஊக்கத்தொகை என்று முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு பொருளாதாரத்திலும், சமூக முன்னேற்றத்திலும், சமத்துவத்திலும், கல்வியின் மூலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும் உலக அளவிலும் சிறந்து விளங்க ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொடரும் திராவிட இயக்கத்தின் கொள்கைதான் காரணம்.

மதுரையிலுள்ள அப்பள நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன், தன்னுடைய சொத்தில் மிகப்பெரிய பங்கை பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி சமுதாயம் முன்னேற வேண்டும் என்று கொடுத்திருக்கிறார். அவரை எந்த அளவுக்குப் பாராட்டினாலும் போதாது. நான் மட்டுமல்ல பலரும் அவருக்குப் பாராட்டுகளையும் விருதுகளையும் அளித்திருக்கிறார்கள். ஆனந்த விகடன் மிகப்பெரிய விருதை அவருக்கு அளிக்க என்னை அழைத்தது மகிழ்ச்சியளித்தது. அவரைப் போல மாணவர்களும் உருவாக வேண்டும்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நீதிக்கட்சியின் பெருமை என்னவென்றால், பொருளாதாரத்திலும் சமூகத்திலும் முன்னேறியவர்கள், பின் தங்கியவர்களுக்காக புரட்சி நடத்தியதுதான் என்று அறிஞர் அண்ணா கூறுவார்.

நானும் என் முன்னோர்களும் கல்வியின் அருமையை அறிந்து செயல்பாட்டிருக்கிறோம். கோடீஸ்வரர்கள் கல்வி எதற்கு என்று நினைத்த காலகட்டத்தில், என் தாத்தா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பயின்று பிறகு வழக்கறிஞருக்கும் படித்துவிட்டு தொழிலில் ஈடுபடாமல், மக்கள் பணிக்கு வந்தார். கல்வியினால் முன்னேறி சுதந்திரமாக இருக்கும் நிலையை அடைந்த பிறகு மக்கள் பணிக்கு வந்தார். வேறு எந்தத் தேவைக்காகவும் வரவில்லை. அதேபோல் என் தந்தை வழக்கறிஞராக இருந்து பல இளைய வழக்கறிஞர்களை உருவாக்கிவிட்டு மக்கள் பணிக்கு வந்தார். அதே பாதையில் நானும் திருச்சி என்.ஐ.டி-யில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்து பிறகு அமெரிக்கா சென்று பல துறைகளில் பட்டம் பெற்று, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பிலிருந்து, தனிப்பட்ட உழைப்பினாலும் கல்வியினாலும் கோடீஸ்வரன் ஆனேன். என் அப்பாவின் சொத்திலிருந்து ஒரு ரூபாய்கூட தேவைப்படாத அளவுக்கு முன்னேறிய பின்புதான் பொதுவாழ்க்கைக்கு வந்திருக்கிறேன்.

நிகழ்ச்சியில்

எனவே எந்த இடத்தில் பிறந்தாலும் முதலமைச்சர் கூறுவதுபோல் உங்களிடமிருந்து பறிக்கவே முடியாத சொத்து என்றால் அது கல்விதான். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். என்னுடைய துறையின் மூலம் 80 கோடி ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் பயிற்சி கொடுப்பதற்கு ஒரு நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்” என்றார்.