`கடித்த 5 நிமிடத்திலேயே இறப்பு…’ கோவையில் பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்!

கோயம்புத்தூர், கணுவாய் பகுதியை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் முரளிதரன். இவர் பாம்புகளை பிடிக்கக் கூடியவர். நேற்றிரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்துள்ளதாக இவருக்கு தகவல் வந்துள்ளது.

உடனே வந்து பாம்புகளை பிடிக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து ஒர்க் ஷாப்பிற்கு வந்த முரளிதரன், இரும்பு பென்ச்சுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றுள்ளார்.

பாம்பு பிடிக்கும்போது

பாம்பை எந்த உபகரணத்தையும் பயன்படுத்தாமல் கைகளாலேயே பிடிக்க முயன்றுள்ளார். தன் கைகளால் லாவகமாக பிடித்த முரளிதரன், அதை பென்ச்சுக்கு அடியிலிருந்து இழுக்கும்போது மேலும் கீழும் சுருண்டு சுருண்டு ஆட்டம் காண்பித்திருக்கிறது. இருந்தாலும் கைகளால் பிடித்த பாம்பை பிளாஸ்டிக் பையில் போட்டு வெளியே எடுத்து வந்திருக்கிறார்.

அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட முரளிதரன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாம்பு பிடிக்கும்போது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது, “பாம்பு கடித்தவுடனே விஷத்தை வெளியேற்றுவதற்காக கடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தத்தையும் வெளியேற்றியுள்ளார். இருந்தாலும் விஷம் உடனடியாக உடல் முழுவதும் பரவிவிட்டது. இதனால், 5 நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. மறைந்திருந்த பாம்பை பிடித்து இழுத்து வெளியே எடுக்கும்போது கடித்திருக்கலாம். அநேகமாக இது கட்டுவிரியன் பாம்பாக இருக்கலாம். இந்தப் பாம்பு உடனடியாக விஷம் ஏறும் தன்மை கொண்டது” என்று சொல்கிறார்கள்.

பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் இறந்திருக்கும் சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மக்களே…! சமூக வலைதளங்களில் வெறும் கையில் பாம்பை லாவகமாக பிடிக்கும் வீடியோக்கள் பலவும் வைரலாகி வருகிறது. அதை எல்லாம் பார்த்து பாதுகாப்பு இல்லாமல் பாம்பை பிடிக்க முயற்சி செய்யாதீர்கள், கவனமாக செயல்படுங்கள். இந்த சமயங்களில், தீயணைப்புதுறையினருக்கு உடனடியாக தகவல் தெரியப்படுத்துங்கள்.” என்று சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.