பட்டியல், பழங்குடி (எஸ்.சி., எஸ்.டி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தீர்ப்பில், ‘சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட பட்டியலினப் பிரிவில் இடம்பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்துவம் வகையில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அரசியல் சாசன அதிகாரம் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆந்திராவில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இ.வி.சின்னையா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ஒரே மாதிரியான சமூக பிரிவுக்குள் துணை வகைப்படுத்துதல் செய்ய அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
2014-ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மாறுஆய்வு செய்யக் கோரி ஆந்திரா மாநில அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பையும், நீதிபதி பெலா எம்.திரிவேதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். அந்தத் தீர்ப்பில், ‘எஸ்.சி பிரிவில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சமூகங்களின் சமூக – பொருளாதார நிலை ஒரே மாதிரியாக இல்லாத நிலையில், இந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசை சட்டப்பிரிவுகள் 15, 16 அல்லது 341 என எந்தப் பிரிவும் தடுக்காது. பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் எஸ்.சி பிரிவினரில் துணைப்பிரிவுகளை மாநிலங்கள் வகைப்படுத்தலாம். சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகப்பிரிவில் துணைப்பிரிவுகளை வகுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 (சமத்துவ உரிமை) அனுமதி அளிக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும், ‘எஸ்.சி பிரிவிலிருந்து எந்தவொரு சமூகமும் நீக்கம் செய்யப்படாமல், துணை வகைப்படுத்துதல் மட்டுமே செய்யப்படுகிறது என்பதால், மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டப்பிரிவு 341(2)-ஐ மீறுவதாக அமையாது. எனவே, எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு’ என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறது. காரணம், பட்டியலினத்தில் இருக்கும் அருந்ததியர் பிரிவினருக்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
முறையாகக் குழு அமைத்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமூகத்தினருக்கான மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டை கலைஞர் கொடுக்க, அதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் நான் அறிமுகம் செய்து நிறைவேற்றினோம். இந்தச் சட்டததை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
எஸ்.சி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல் எழுப்பிவந்ததுடன், அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றிருக்கிறார்.
‘வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தத் தீர்ப்பு, சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி’ என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, அந்த சமூக மாணவர்கள் உயர் கல்வி பெற்றுவருகிறார்கள். மேலும், உள்ஒதுக்கீட்டின் பலனாக, அரசு வேலைவாய்ப்புகளில் அருந்ததியர் சமூகத்தினர் உரிய பலனை பெற்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88