இலங்கை ரோந்து கப்பல் மோதி, உயிரிழந்த தமிழக மீனவர் – மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமா?

`டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியிடம் இலங்கை தோற்ற நிலையில், திட்டமிட்டே தமிழக மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்து மீனவரை கொலை செய்திருக்கிறது இலங்கை கடற்படை!’ என பாதிக்கப்பட்ட மீனவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறனர்.

கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒரு மாதத்துக்குள் சுமார் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்து அந்நாட்டு சிறைகளில் அடைத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக மீனவர்கள் போராடிவரும் நிலையில், தற்போது மீண்டுமொரு கொடூரமான செயலை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து நிகழ்த்திருக்கிறது. கடந்த ஜூலை 31-ம் தேதி, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான IND-TN-10-MM-73 என்ற விசைப்படகில், மூக்கையா, முத்துமுனியன், மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களுடன் கச்சத்தீவு பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்து மூழ்கியது. அதை எதிர்பாராத தமிழ்நாடு மீனவர்கள் நான்குபேரும் கடலில் குதித்து உயிர்த்தப்ப முயற்சி செய்தனர். ஆனால் கெடுவாய்ப்பாக மலைச்சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல, ராமச்சந்திரன் என்ற மீனவர் நடுக்கடலில் காணாமல் போயிருக்கிறார். மற்ற இரண்டு மீனவர்களையும் மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், `திட்டமிட்டு தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்’ எனக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

`கிரிக்கெட் தோல்விக்கு, மீனவர் உயிர்கள்!?’

இந்த சம்பவம் குறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாம்பன் சின்னத்தம்பியிடம் பேசியபோது, “கடந்த ஜூலை 30-ம் தேதி இந்தியா – இலங்கை இடையே நடந்த டி-20 இறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கை இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது. இதனால் வழக்கம்போல இலங்கை கடற்படை வீரர்கள் கோபத்தில் இருந்தனர். இதையறிந்து ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அந்த நிலையில்தான், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நான்கு தமிழக மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து கப்பலை வைத்து முட்டி மோதி மூழ்கடித்திருக்கின்றனர். இதில் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் காணமல் போயிருக்கிறார். மற்ற இருவர்களையும் காவலில் எடுத்துச்சென்ற இலங்கை கடற்படை தற்போது விவகாரம் பெரிதாகியிருக்கும் நிலையில் விடுதலை செய்திருக்கிறது. இதேபோல, நமது படகுகளை இலங்கை கடற்படை முட்டி மோதி மூழ்கடிப்பு செய்வதும், இந்திய மீனவர்களை சித்திரவதை செய்து கொல்வதும் பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்

குறிப்பாக, கடந்த 2011 ஏப்ரல் 2-ம் தேதி நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியுற்றதால், அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகை பிடித்து அதில் இருந்த விக்டஸ், மாரிமுத்து, ஜான்பால், அந்தோணிராஜ் ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படை சித்திரவதை செய்து கொன்றது. இதுபோல ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தால் இலங்கை கடற்படையால் தொடர்ந்து இந்திய மீன்பிடி படகுகள் முட்டி மூழ்கடிக்கப்படுவதும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்திய மீனவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாம்பன் சின்னத்தம்பி

ஒருநாட்டின் பிரஜைகளின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால் மீனவர்கள் விசயத்தில் மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். மீனவர்களை மூன்றாம் தர குடிமக்களாக மத்திய மாநில அரசுகள் பார்க்கிறதா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து, இந்திய மீனவர்களாகிய தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்திய பிரஜைகளின் உயருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய அரசு இனி அனுமதிக்க கூடாது. கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு ஒரு கோடி இழப்பிடு மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும்!” என வலியுறுத்தினார்.

`கொலை வழக்கு பதிவு செய்து, சிறையிலடைக்க வேண்டும்!’

அதேபோல தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கை கடற்படையின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாக பார்க்க முடியாது. அதை திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும் தான் பார்க்க வேண்டும். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவர்கள் கடந்த ஜூன் 23-ம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளனர். இதை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும்!” என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

உயிர்பிழைத்த இரு மீனவர்கள்

அதேபோல நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும், பெரும் மனவேதனையும் அளிக்கிறது. இந்திய ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டபோதும், அதன் பிறகான தற்போதைய பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்துவரும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த, அணுவளவும் இந்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததில்லை. தமிழர்களின் உயிர், உடைமைகளை பறிக்கும் இலங்கை அரசை கண்டிக்க மறுத்து, அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜக அரசின் துரோக ஆட்சிமுறையே இத்தாக்குதல்களுக்கு முழுமுதற் காரணமாகும். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மீனவர்கள் மீதான கொடுந்தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து இலங்கை இனவாத அரசை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியமும், செயல்படாத்தன்மையுமே தற்போது மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட முக்கியக் காரணம்!” என கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

`தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம்!’

`தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம்!’

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது. இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் கண்துடைப்பு கண்டனம்?!

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி வெளிவிவகார அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினோம். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இரு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதுபோன்று மீண்டும் மீண்டும் நிகழாமல், பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து இலங்கை அரசிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்!” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு செய்திக்குறிப்பு

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், “மீனவர் கைது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்திய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். தற்போது இலங்கையில் 83 தமிழக மீனவர்கள் நீதிமன்றக் காவலில் இருக்கின்றனர். மேலும் 169 மீன்பிடி விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றன” எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88