Ismail Haniyeh: `அகதிகள் முகாம் டு ஹமாஸ் தலைவர்..!’ – இஸ்ரேலின் டார்கெட்டான இஸ்மாயில் ஹனியா யார்?

காசா மீதான இஸ்ரேல் போர்த் தாக்குதலை நிறுத்துவதற்காகவும் போர்நிறுத்ததுக்கான அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துவந்த ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா வான்வழித்தாக்குதலில் கொல்லப்பப்பட்டார்.

ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஹனியாவை, அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்தே வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்காத நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்த விருந்தினரை கொலை செய்தற்காக நிச்சயம் இஸ்ரேலைப் பழிவாங்குவோம் என சூளுரைத்திருக்கிறது ஈரான். இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடையே போர்ப்பதற்றம் இன்னும் தீவிரமாகியிருக்கிறது.

இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

யார் இந்த இஸ்மாயில் ஹனியா? கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

1963-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் ஓர் அகதிகள் முகாமில் பிறந்தார் இஸ்மாயில் ஹனியா. தனது சிறுவயது முதலே பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் ராணுவ அடக்குமுறைகளை நேரில் பார்த்து வளர்ந்தவர் என்பதால் இஸ்ரேல் மீதான கோபம் இயல்பாகவே அவர் இளம் ரத்தத்தில் கொதித்தெழுந்தன. அந்த நிலையில், பாலஸ்தீனத்தின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிராக முதன்முறையாக பாலஸ்தீனத்திலிருந்து ஓர் மாபெரும் இஸ்லாமிய கிளர்ச்சி எழுந்தது. அதன்விளைவாக 1987-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீன – காசா பகுதிகளை விடுவிப்பதற்காகவும், இஸ்ரேலை அழித்தொழிப்பதற்காகவும் அணிதிரண்ட பாலஸ்தீன இளைஞர்கள் `ஹமாஸ்’ என்ற கிளர்ச்சி குழுவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினர். அந்த ஹமாஸ் அமைப்பில் தன்னை இணைந்துகொண்ட இஸ்மாயில் ஹனியா மிகக் குறுகிய காலத்திலேயே அமைப்பின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.

இதனால், இஸ்ரேல் ராணுவத்தால் ஹனியா கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை இஸ்ரேல் அரசால் கைதுசெய்யப்பட்டார். குறிப்பாக, 1992-ம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதில் இருக்கும் மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். பின்னர், தெற்கு லெபனான் பகுதிக்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே 6 மாதங்கள் சிறைவைக்கப்பட்டார். ஹனியா மீது இஸ்ரேல் கையாண்டுவந்த தொடர் அடக்குமுறைகள் அவருக்கு ஹமாஸ் அமைப்பினரிடையே செல்வாக்கை உயர்த்தியது. படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக்கு ஹமாஸ் அமைப்பில் பதவியுயர்வு பெற்றார். அதேசமயம் அதுவரை ஹனியாவை கைது செய்து சிறையிலடைப்பது, நாடுகடத்துவது என்று செய்துவந்த இஸ்ரேல், அவரை முழுவதுமாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

2003-ம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷேக் அஹமது யாசின் மற்றும் அப்தெல் அசிஸ் ரன்டிசி உள்ளிட்ட தலைவர்களை அடுத்தடுத்து இஸ்ரேல் கொலை செய்தது. அதேசமயம் ஹனியா மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைதொடர்ந்து 2005-ம் ஆண்டு ஹமாஸின் ரகசியக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, பாலஸ்தீனம் காசா பகுதில் தேர்தல் நடைபெற அதில் ஹமாஸ் அமைப்பு பெரும்பாலான இடங்களில் பெருவாரியான வெற்றிபெற்றது. இதன்விளைவாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் அரசாங்கத்தில், இஸ்மாயில் ஹனியாவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளிலேயே பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் வன்முறைகளால் ஹனியாவின் பிரதமர் பதவி பறிபோனது.

இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரானார். ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே மற்ற நாடுகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். அந்த நிலையில், 2018-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இஸ்மாயில் ஹனியாவை `சர்வதேச பயங்கரவாதி’ என்று பிரகடனம் செய்தது. இதனால் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டார் ஹனியா. சில ஆண்டுகள் துருக்கி, சில ஆண்டுகள் கத்தார், ஈரான், காசா என மாறிமாறி தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இந்தநிலையில்தான், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல் `ஹமாஸை’ அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது’ என்றுகூறி தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. ஆனால் இந்தப் போரை நிறுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார் ஹனியா.

முதலில் குடும்பம்… அடுத்த ஹனியா:

அந்தநிலையில்தான், கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் மற்றும் அவரின் நான்கு பேரக்குழந்தைகளையும் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போதும்கூட ஹனியா, “எனது மகன்கள், பேரன்களின் மரணங்கள்… போர் நிறுத்தம் தொடர்பாக நான் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் பாதிக்காது!” என்று உறுதியாகக் கூறினார். தொடர்ந்து, எகிப்து, கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மறைமுகமாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வலியுறுத்தினார். அந்த நிலையில்தான், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு, அவர் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில் தனது மெய்க்காப்பாளருடன் தங்கியிருந்தார். அந்தநிலையில்தான், அதிகாலை அவர் தங்கியிருந்த கட்டடத்தின்மீது ஆளில்லா ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மெய்க்காப்பளருடன் சேர்ந்து இஸ்மாயில் ஹனியாவும் உயிரிழந்தார்.

ஈரானில் நடந்த இறுதி ஊர்வலம்

இந்த படுகொலைக்கு ரஷ்யா, துருக்கி, கத்தார், சீனா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அதேசமயம் தங்கள் நாட்டில் வைத்து நடத்தப்பட்ட படுகொலையால் கோபத்தின் உச்சத்துக்கு ஆளாகியிருக்கும் ஈரான், “எங்கள் நாட்டுக்கு விருந்தினராக வந்த தலைவரை இஸ்ரேல் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறது. அதற்கு கடுமையான பதிலடி நிச்சயம். எங்கள் விருந்தினரை எங்கள் மண்ணில் கொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்!” என அதிரடியாக அறிவித்திருக்கிறது. இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீன-காசா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் நேரடியாக களமிறங்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் பற்றிக்கொண்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88