மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த கஸ்தூரி கலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் என் மகன், மருமகள் பேரனுடன் வசித்து வருகிறேன். மகன் கிருஷ்ணகுமார் பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில் என் வீட்டருகே வசித்து வரும் காவல்துறை டி.எஸ்.பி வினோதினி, என் வீட்டை அவருக்கு விற்பனை செய்ய சொல்லி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

கடந்த ஜூலை 9-ம் தேதி என் மகன் எங்கள் வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதற்கு வினோதினியின் தூண்டுதலின் பேரில் அவரின் தங்கை போலீஸில் பொய்ப் புகார் அளித்ததால் என் மகனை விசாரணை எனக்கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் என் மகன் மனதளவில் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், ‘காவல்துறை அதிகாரி வினோதினி சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என அச்சுறுத்தியுள்ளனர்.
வினோதினி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக எங்களை தொந்தரவு செய்து வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் அளித்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்களை தொந்தரவு செய்யும் வினோதினி மீது மதுரை மாநகர் காவல் துறை ஆணையர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டவிரோத காவலால் மன உளைச்சலுக்கு ஆளான என் மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவல்துறையில் உயரதிகாரியாக உள்ளவர் தன் உறவினருக்கு வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என மிரட்டியும், வீட்டிலுள்ள பெண்களை குண்டர்களை வைத்து மிரட்டியும் உள்ளார். மேலும், மனுதாரர் மகனை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து தொந்தரவும் செய்துள்ளார். எனவே இவர் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர், புகாருக்குள்ளான வினோதினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட அதிகாரிகள் சிலர் மதுரை மாநகர காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பதாக புகார் எழுப்பப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரி வினோதினி மீதான வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88