இரண்டாவது திருமணத்தை மறைத்த தீயணைப்பு அலுவலர்; முதல் மனைவி கொடுத்த புகாரால் பணியிலிருந்து நீக்கம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தனது கணவர் பிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விவகாரம் முதல் மனைவிக்கு தெரியவர, இது தொடர்பாக அவர் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது கோவை மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குநர் சரவணகுமார் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தினார்.

திருமணம்

விசாரணையில் முதல் மனைவி இருக்கும்போது சட்டத்துக்குப் புறம்பாக, பிரபாகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதும், சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளை முறைகேடாக பணி பதிவேட்டில் பதிவு செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை அறிக்கையின்படி, ஒழுங்கீனமாக இருந்ததாக பிரபாகரனை தீயணைப்புத்துறை இணை இயக்குநர், பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.