புதுச்சேரி: ரேஷன் கடைகளில் இலவச அரிசி `டு’ மாணவர்களுக்கு நீட் பயிற்சி! – 2024-25 பட்ஜெட் ஹைலைட்ஸ்

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 31-ம் தேதி துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 6 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 மாதங்களுக்கு இன்று காலை 9 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன்பு, மூன்றாவது முறை பிரதமராக மோடியை தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். உள்நாட்டு நிதி வருவாய் ரூ.6,914 கோடி என்றும், மத்திய அரசின் நிதிக்கொடைரூ.3,268 கோடி என்றும் தெரிவித்த அவர், ரூ.2,066 கோடி கடன் வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், “என்னுடைய அரசு இந்த ஆட்சிப் பரப்பின் அனைத்து தரப்பு மக்களின், சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

2024-25 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல்வர் ரங்கசாமி

அதன் பயனாக இந்த ஆட்சிப் பரப்பின் மொத்த உற்பத்தி குறியீடு (GSDP) மற்றும் தனிநபர் வருமானம் நிலையாகவும், சீராகவும் உயர்ந்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அரசின் நிதி ஆதாரங்களின் பெரும்பகுதி, சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட முக்கிய செலவினங்களுக்காக செலவு செய்யப்படுகிறது. பட்ஜெட் மதிப்பீடான ரூ.12,700 கோடியில், அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.2,574 கோடியும், ஓய்வூதியங்களுக்கு ரூ,1,388 கோடியும், கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்காக ரூ.1,817 கோடியும், மின்சாரம் வாங்குவதற்காக ரூ.2,509 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவி, எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கான மானியம் உள்ளிட்ட பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,900 கோடியும், அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் மானியக் கொடையாக 1,082 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு…

Ø பொதுமக்கள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு `என் வீடு என் நிலம்’ என்ற திட்டத்தினை, பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்பத்தின் உதவியுடன், சோதனை முறையில் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக, ரூ.5,000 மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம், ஆடிப்பட்டம் முதல் இந்த திட்டம் முழு வீச்சில் நடைமுறைபடுத்தப்படும்.

Ø  காரைக்கால் பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அழித்து, நிலத்தை மீண்டும் சாகுபடிக்கு ஏற்றவாறு தயார் செய்ய மானியமாக, ஹெக்டேருக்கு ரூ.15,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Ø  மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்‌ஷா ஏவம் உத்தான் மகாபியன் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் நிறுவுவதற்காக வழங்கப்படும் 30% மானியம், 100% ஆக உயர்த்தப்படும். இந்த திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு படிப்படியாக நடைமுறைபடுத்தப்படும்.

Ø  விவசாயிகளுக்கு நியாயமான ஆதார விலையை உறுதி செய்யும் பொருட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் நெல்லின் தரத்தை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும் அளவுக்கு உயர்த்த, அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கான உதவிகள் செய்யப்படும்.

Ø  பாரம்பர்ய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாதஸ்வரம், பறை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த தென்னகப் பண்பாட்டு மையத்தின் உதவியுடன் சிறப்பு கவனம் அளிக்கப்படும்.

Ø  மத்திய அரசின் நிதியுதவியுடன் கீழுர் நினைவுச்சின்னம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

Ø  இந்திய தொல்லியல் துறை உதவியுடன், புதுச்சேரி அரிக்கமேட்டில் ஒரு விளக்க வழிகாட்டுதல் மையம் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் அமைக்கப்படும்.

ரங்கசாமி

Ø  காரைக்கால் பிராந்தியத்திற்கென தனியாக ஒரு அருங்காட்சியகம், காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  புதுவை கலைமாமணி விருது வழங்குவதில் புகைப்படக் கலையையும், பேச்சுக் கலையையும் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்படும்.

Ø  புதிய ரேஷன் கார்டு வழங்குதல், அதில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் போன்றவை பொதுச் சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.

Ø  தனியார் பங்களிப்புடன் எத்தனால் மற்றும் சர்க்கரை உற்பத்திக்காக புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Ø  அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  பிராந்திய அளவில் முதல் 10, +2 பொதுத்தேர்வுகளில் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

Ø  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் விகிதத்தை உயர்த்த, நடப்பாண்டு முதல் +1 படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஏற்கெனவே நகர்ப்புறத்தில் இருக்கும் இரண்டு பயிற்சி மையங்களுடன், கிராமப்புற மாணவர்களுக்காக கிராமப்புறங்களில் இரண்டு நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

Ø  மடுகரைப் பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியை ரூ.15 கோடி செலவில், இந்த நிதியாண்டில் ஒரு முன் மாதிரி கலைக் கல்லூரியாக  மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயற்கை ஹாக்கி திடல் அமைக்கப்படும்.

Ø  காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தில் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உள்விளையாட்டரங்கம் நடப்பு நிதியாண்டில் கட்டி முடிக்கப்படும்.

Ø  மின் துறையில் பணிபுரிந்த 176 கட்டுமான உதவியாளர்கள் பணி உதவி பெற்றதால் ஏற்பட்ட காலியிடங்களையும், ஏற்கெனவே காலியாக உள்ள 73 இளநிலை மின் பொறியாளர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணி நடப்பு நிதியாண்டிலேயே முடிக்கப்படும்.

Ø  மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ.6,500-லிருந்து ரூ.8,000 ஆகவும், மழைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.3,000-லிருந்து, ரூ.6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

Ø  சேதராப்பட்டில் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தையும், கலிதீர்த்தாள்குப்பம் மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø  மத்திய அரசின் ESI மூலமாக புதுச்சேரி கோரிமேட்டில் ESI மாதிரி மருத்துவமனை மற்றும், அரியாங்குப்பத்தில் இரண்டு மருத்துவர்கள் கொண்ட ESI மருத்துவமனை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில், எலும்பு முறிவு மற்றும் பிற விபத்துகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வலி நீக்கும் பிரிவு ஒன்று துவக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முழு தானியங்கி நோய் எதிர்ப்பு பகுப்பாய்வு (Fully Automated Immuno analyzer), முழு தானியங்கி (Fully Automated Electrophoretic Unit), (iii) ஆஞ்சியோ பிளாஸ்டிக்குக்கான லேசர் த்ரோம்பெக்டாமி F (Laser Thrombectomy Device for Angioplasty), 3D கலர் டாப்ளர் எக்கோ ஸ்கேனர் சிஸ்டம் (3D Colour Doppler Echo Scanner System) மற்றும் (v) விட்ரியோ விழித்திரை அறுவை சிகிச்சைக்காக பின்புற அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் லேசர் பார்வை திருத்தும் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.

Ø  நரம்பியல் துறையில் குழந்தைகள் நரம்பியல் பிரிவு உட்பட, 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயக்கம் மற்றும் தெளிவற்ற குரலுக்கு சிகிச்சையளிக்க முழு அளவிலான வெர்டிக்கோ ஆய்வகம் அமைக்கப்படும். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சிறுநீரகவியல் துறையில் லேப்ராஸ்கோபிக்கான உயர்வகை கேமரா, தற்போதுள்ள ESWL இயந்திரத்தை தரம் உயர்த்துதல் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்படும்.

Ø  காரைக்காலில் இயங்கிவரும் அரசு பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

Ø  தேசிய சுகாதார ஆயூஷ் திட்டத்தின்கீழ் பள்ளி சுகாதார திட்டமான “ஆயுர்வித்யா” விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, ரெட்டியார்பாளையம், காந்திநகர் மற்றும் கோரிமேடு ESI மருத்துவமனைகளில் ஆயுஷ் மற்றும் யோகா பிரிவுகள் நிறுவப்படும். இலாசுப்பேட்டை, அரியாங்குப்பம், கோரிமேடு, திருக்கனூர், காரைக்கால் மற்றும் மாஹே பந்தக்கல் ஆகிய இடங்களில் புதிய நலவழி ஓமியோபதி மையங்கள் தொடங்கப்படும்.

Ø  உமாங் (UMANG) கைப்பேசி செயலி மூலம் அனைத்து அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் பொதுமக்கள் எளிதில் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Ø  அரசு ஊழியர்களின் பணி சம்பந்தமான தகவல்களை (Service Book) பராமரிக்க, எனது அரசு மின்னணு-மனிதவள மேம்பாட்டு செயலி (e-HRMS)-யை நடைமுறைப்படுத்த உள்ளது.

Ø  புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களின் கடவுள் திரு உருவச்சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் இதர அசையும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும், மின்னணு (டிஜிட்டல்) முறையில் தயாரிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பார்வைக்காக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Ø  கோயில் நில சொத்துக்களின் நில அளவை கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்படும். குத்தகைக்கு விடப்பட்ட கோயில் சொத்துக்களுக்கு முறையான வாடகை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Ø  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளுக்கு, உரிமங்கள் பெறுவது மற்றும் ஆய்வுகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் 2024 (Exemption from approvals to Commence Business for Micro, Small and Medium Enterprises Bill 2024) இயற்றி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

Ø  புதிய தொழில் தொடங்கவும் மற்றும் இயங்கிவரும் தொழில்களை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்கு நிலம் மற்றும் கட்டிடங்களை வாங்குதல், அடமானம், நில அடமானம் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றுக்கான முத்திரைத்தாள் தீர்வுத் தொகையை தொழில் முனைவோருக்கு 100 விழுக்காடு முழுமையாக திருப்பி அளிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

Ø  கரசூர் மற்றும் சேதராப்பட்டு கிராமங்களில் பல்துறை தொழிற்பேட்டையை நிறுவதற்கான வரைபடம் (Master Plan) தயாரிக்கப்பட்டு அதற்குண்டான வேலைகள் நடந்து வருகிறது.

Ø  புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ரூ.58.75 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

Ø  புதுச்சேரி நகரப்பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு ரூ.20.38 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்.

Ø  புதுச்சேரி, வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில்  ரூ,20.38 கோடி மதிப்பீட்டில் 3 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம்.

Ø  புதுச்சேரி ஏ.எஃப்.டி ஆலை அருகே ரயில்வே துறையுடன் இணைந்து, ரூ.71.40 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி அரசின் பங்காக ரூ.53.55 கோடிகள் வழங்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

Ø  காவல்துறையிலுள்ள காலிப்பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும்.

Ø  புதுச்சேரி துறைமுகத்தில் பயணியர் கப்பல் முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தேசிய துறைமுகத்திற்கான தொழில்நுட்ப மையம் (M/s. National Technology Centre for Ports), 2 & கடற்கரைகள்(Waterways & Coasts) (NTCPWC), தொழில்நுட்பக் கழகம், சென்னை(IIT, Chennai) மேற்கொள்ளும்.

Ø  சரக்கு மற்றும் மீன்பிடி படகுகள் துறைமுகத்திற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக மணல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். தூர்வாரப்பட்ட மணலை கொண்டு புதுச்சேரி நகர கடற்கரையை புனரமைக்கவும். துறைமுகத்தில் வழிகாட்டி கருவிகள் அமைக்கவும் பயன்படுத்தப்படும்.

Ø  மறைமலை அடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலையை இணைக்கும் உப்பார் கால்வாயில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானத்தின் மீதமுள்ள பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் மாநில நிதியில் கட்டி முடிக்கப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவை

Ø  ரூ.500 கோடி மதிப்பீட்டில் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிக்னல்களை இணைக்கும் மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, சென்னையில் அமைந்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Ø  பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (PMGSY) ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிராமங்களில் 92 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. SIDBI, NABARD வங்கி மற்றும் மாநில நிதியுதவியுடன் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்திய நகர்ப்புறங்களில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்கள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

Ø  துணைநிலை ஆளுநரின் தற்காலிக அலுவலகம் மற்றும் குடியிருப்பு வசதிக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும். புதுச்சேரி, ராஜ்நிவாஸ் கட்டடம் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும்.

Ø  இலாஸ்பேட்டையில் பழமையான பழுதடைந்த அரசு ஊழியர் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

Ø  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பத்து கிராமங்கள் வழியாக அமைய உள்ள விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் NH-45A நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நில உரிமையாளர்களுக்கு சேர வேண்டிய மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையான ரூ.10.59 கோடி நடப்பாண்டில் வழங்கப்படும்.