`பட்னாவிஸ் அல்லது தாக்கரே… அரசியலில் இருவரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும்!” – உத்தவ் சவால்

மகாராஷ்டிராவில், மறைந்த பால் தாக்கரே தொடங்கிய சிவசேனாவை உடைத்ததில் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முக்கியப் பங்கு வகித்தார் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. `அவர்தான் கொரோனா காலத்தில் சிவசேனா தலைவர்களிடம் பேசிக் கட்சியை உடைத்தார்’ என்று உத்தவ் தாக்கரே தரப்பில் கூறப்படுகிறது. அதனால் பா.ஜ.க., சிவசேனா (உத்தவ்) இரண்டுக்கும் இடையே கடுமையான பகை இருந்துவருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி 9 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பா.ஜ.க-வும் மகாராஷ்டிராவில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 9 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. அடுத்தகட்டமாக இரு கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். இதில், “எங்களது கட்சி உடைக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக மத்திய விசாரணை ஏஜென்சிகளும், பண பலமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எங்களைச் சிறையில் அடைக்கவும் விரும்பினர். ஆனால், அனைத்திலிருந்தும் மீண்டு வெற்றிபெற்றிருக்கிறோம். என்னையும், என் மகனையும் சிறையிலடைக்க தேவேந்திர பட்னாவிஸ் சதி செய்வதாக மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் என்னிடம் தெரிவித்தார். நீங்கள் (பட்னாவிஸ்) நேர்வழியில் செயல்பட்டால், நாங்களும் நேராக இருப்போம், ஆனால், நீங்கள் குறுக்குவழியில் விளையாடினால், நாங்களும் அவ்வாறே செய்வோம். அரசியலில் நீங்கள் (பட்னாவிஸ்) அல்லது நான் என இருவரில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஸ் அகாடி மக்களவைத் தேர்தலில் 6-ல் 4 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது.

இது பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.க தலைவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்க வேதனையாக இருக்கிறது. பா.ஜ.க வஞ்சகர்களின் கட்சி. சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம், `உத்தவ் ஜி நீங்கள் நாட்டுக்குப் புதிய வழியைக் காட்டியிருக்கிறீர்கள்’ என்று தெரிவித்தனர். நான் மாநகராட்சி கவுன்சிலராகக்கூட தேர்வுசெய்யப்படவில்லை. ஆனால், நான் நேரடியாக முதல்வரானேன். நான் அனைத்தையும் சாத்தியமாக்குவேன்.

உத்தவ் தாக்கரே

வரும் சட்டமன்றத் தேர்தல் உங்களுக்கு இறுதி சவால். அவர்கள் கட்சியை உடைத்தார்கள். சிவசேனா ஒன்றும் துருப்பிடித்த வாள் கிடையாது. அது கூர்மையான ஆயுதம். மும்பையையும் மகாராஷ்டிராவையும் பாதுகாக்க நாம் போராட வேண்டும். அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். கட்சி பிரிந்தபோது வெளியில் சென்றவர்கள், இப்போது மீண்டும் வர விரும்புகின்றனர். கட்சியிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம். நாங்கள் சிவசேனா தொண்டர்களைக்கொண்டு அரசியல் போராட்டத்தைத் தொடருவோம். கட்சியின் சின்னம், பெயர் விவகாரத்தில் மக்களிடம் குழப்பம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரேயின் பேச்சு குறித்து மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலார், சுதிர் முங்கந்திவார், பிரவீன் தாரேகர் போன்றோர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். “உத்தவ் தாக்கரே 100 பிறவி எடுத்தாலும் தேவேந்திர பட்னாவிஸை அரசியலிலிருந்து ஒழிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். உத்தவ் தாக்கரே மக்களிடம் வகுப்புவாதத்தை விதைப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் குற்றம்சாட்டினர். சந்திரசேகர் பவன்குலே இது குறித்துக் கூறுகையில்,“ பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் வெற்றிபெற்றுவிட்டு உத்தவ் தாக்கரே பா.ஜ.க-வின் முதுகில் குத்தினார்” என்று குற்றம்சாட்டினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88