நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க. கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 23 தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம்கட்டமாக மீதமிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் ஆய்வுக் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் காரசாரமாக பேச்சுகள் எழுந்ததாகச் சொல்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.
நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க சார்பில் நல்லதம்பி என்பவர் வேட்பாளராகக் களமிறங்கினார். அவருக்காக, அ.தி.மு.க-வினரும் தேர்தல் வேலைப் பார்த்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணிக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதோடு, அப்போதிருந்த சிட்டிங் திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார் மீது தொகுதிக்குள் பெரும் எதிர்பலை நிலவியதால், நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுவிடலாம் என அ.தி.மு.க தலைமை கணக்குப் போட்டது. ஆனால், தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பி, டெபாஸிட்டைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்தார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குள், சிறுணியம் பலராமன், பி.வி.ரமணா, பென்ஜமின், அலெக்ஸாண்டர், மூர்த்தி என ஐந்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இருந்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு டெபாஸிட் பறிபோனது, கட்சித் தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது. சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அதுகுறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ‘தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்படி இருந்தபோதிலும், அக்கட்சிக்கு தொகுதியிலிருந்த எதிர்ப்பை ஏன் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளவில்லை..?’ எனக் கேள்வி எழுப்பினார் எடப்பாடி. அதற்கு, ‘ஜெயக்குமாருக்கு பதிலாக புதிய முகமாக சசிகாந்த் செந்தில் என்பவரை காங்கிரஸ் தலைமை வேட்பாளராக்கிவிட்டது. இதனால், பொது வாக்காளர்களும் புதிய முகத்தை விரும்பிவிட்டனர். தவிர, சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே தி.மு.க கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சகல அதிகாரத்தையும் பயன்படுத்தி சசிகாந்த் செந்திலை வெற்றிப்பெற வைத்துவிட்டனர்’ என விளக்கமளித்தனர் கட்சி நிர்வாகிகள்.
எடப்பாடிக்கு அருகிலிருந்த கே.பி.முனுசாமி, ‘சரி, புதிய முகத்திற்கு மக்கள் வாக்களித்துவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும்போது, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், சரிபாதிக்குக்கும் கீழே இந்தமுறை வாக்குகள் குறைந்திருக்கின்றன… அ.தி.மு.க-வின் வாக்குகள் எங்கே போனது, ஏன் இந்த சரிவு?’ எனக் கேள்வி எழுப்பினார். பொன்னேரி, திருவள்ளூரிலிருந்து வந்திருந்த சில நிர்வாகிகள் எழுந்து, ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க நம்மோடு கூட்டணியில் இருந்தது. அவர்கள் கட்சி சார்பாகவும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்தமுறை அவர்கள் நம்மோடு அணியில் இல்லை என்பதால், வன்னியர் சமூக வாக்குகள் பெரிதாக நமக்குக் கிடைக்கவில்லை’ என மென்று விழுங்கி பதிலளித்தனர்.
இதனால் டென்ஷனான எடப்பாடி, ‘வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தீர்மானம் கொண்டுவந்ததே நாம்தானே… அதைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டியதுதானே’ என சீறவும், ‘நாங்களும் சொல்லித்தான் வாக்குச் சேகரித்தோம். வலுவான கூட்டணி இருந்திருந்தால் வெற்றிப் பெற்றிருக்கலாம்’ என கோரஸ் பாடினார்கள் நிர்வாகிகள். மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் 467 பூத்துகள் வருகின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில், அந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 94,414 வாக்குகள் பெற்றிருக்கிறார் மாதவரம் மூர்த்தி. அதே தொகுதியில், இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தே.மு.தி.க-வுக்கு வெறும் 40,074 வாக்குகளே கிடைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 54 ஆயிரம் வாக்குகள் கிடைக்காமல் போய்விட்டது. இதுதொடர்பாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தியிடம் விளக்கம் கேட்டார் எடப்பாடி.
அதற்கு விளக்கமளித்த மூர்த்தி, ‘பா.ம.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால், நமக்குச் சாதகமாகியிருக்கும். தவிர, நாம் தமிழர் வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகளை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே பெற்றுவிட்டார். தி.மு.க-விடமிருந்த கூட்டணி பலம் நமக்கு இல்லை என்பது ஒரு சறுக்கல்’ என்றார். அதற்கு கே.பி.முனுசாமி, ‘2016 சட்டமன்றத் தேர்தலில், பா.ம.க நம்மோடு கூட்டணியில் இல்லை. அந்தத் தேர்தலில் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு 14,245 வாக்குகளைத்தான் பெற்றார்கள். நம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தட்சிணாமூர்த்தி, ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார். ஆக, பா.ம.க நம்மோடு இருந்தால் மட்டும்தான் நமக்கு வாக்குகள் விழும் என்று இல்லை. நம் கட்சிக்கென விழும் வாக்குகள் நமக்கு இந்தமுறை கிடைக்கவில்லை. அதைக் கிடைக்கச் செய்வதற்கு என்ன செய்யலாம் எனச் சொல்லுங்கள்..?’ என்றார்.
அதற்கு மாதவரம் மூர்த்தியிடம் எந்த பதிலும் இல்லை. அந்தச் சமயம், மாதவரத்திலிருந்து வந்திருந்த சில நிர்வாகிகள் எழுந்து, ‘சசிகலா, பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்களோடு பயணிப்பவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமே… நம் கட்சியும் களத்தில் பலப்படுமே’ என ஆலோசனை அளித்தனர். திடீரென டென்ஷனான கே.பி.முனுசாமி, ‘சசிகலா ஒரு செத்த பாம்பு.. அந்தம்மாவைப் பற்றி இங்கு ஏன் பேசுகிறீர்கள். இந்த இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், எடப்பாடியாரின் தலைமையை ஏற்று வருவதாக இருந்தால் அவர்களே வருவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் வேலையைப் பாருங்கள்…’ என சருக்கென பேசிக் கூட்டத்தை முடித்தார்.
சசிகலாவை திடீரென முனுசாமி விமர்சித்த விதம் கூட்டத்திற்குள் சிறு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், யாரும் எதிர் கருத்துச் சொல்லவில்லை. ‘தென்காசியில் சசிகலாவின் சுற்றுப்பயணத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. அவரெல்லாம் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது…’ என எடப்பாடியின் காதுகள் குளிர வார்த்தைகளைத் தெளித்துவிட்டு நிர்வாகிகளெல்லாம் புறப்பட்டனர்” என்றனர் விரிவாகவே.
இதுவரை, 35 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையிலுள்ள மூன்று தொகுதிகளும், ஆகஸ்ட் 5-ம் தேதி கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டங்களின் முடிவில், சில களையெடுப்புகளும் கட்சிக்குள் நடக்கும் என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88