RSS: `குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்!’ – துணை ஜனாதிபதி புகழாரம்

“பாஜக ஒரு இந்துத்துவா கட்சி, பாஜக-வின் சித்தாந்த வழிகாட்டியும், பல்வேறு சமயங்களில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புமான ஆர்.எஸ்.எஸ்ஸின் (RSS) கொள்கைகளை நிறைவேற்றுவதுதான் மோடி அரசின் வேலை” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இவ்வாறிருக்க, ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்ற 58 ஆண்டுகால தடையை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ்

இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அவையில் புகழாரம் சூட்டியிருக்கிறார். முன்னதாக, இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் நியமனம் தொடர்பாக விமர்சித்த சமாஜ்வாதி எம்.பி லால் ஜி சுமன், “ஒருவரின் தரம் பற்றிய மத்திய அரசின் அளவுகோல், அந்த நபர் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வந்தவரா என்று பார்ப்பதுதான்” என்று கூறினார்.

உடனடியாக இதனை ஆட்சேபித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், “இதனை அரசியலாக்கக் கூடாது என இந்த அவையில் நான் கூறியிருக்கிறேன். இப்போது இவர் விதிகளை மீறவில்லை, இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு. நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இருக்கிறது.

ஜெக்தீப் தன்கர்

நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு ஆர்.எஸ்.எஸ் முழு அரசியலமைப்பு உரிமைகளைக் கொண்ட அமைப்பு என்று இதன்மூலம் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்த அமைப்பு குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கிறது. அதோடு, ஒரு அமைப்பாக தேச நலன், நமது கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருகிறது. மேலும், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியது. அத்தகைய அமைப்பின் உறுப்பினர்கள் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு கேட்பது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று புகழ்ந்தார். ஜெக்தீப் தன்கரின் இத்தகைய பேச்சால், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளியேறினர்.