ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு: `என்மீது யார் வழக்கு பதிய சொன்னார்கள் என தெரியும்’- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க, இன்று மாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், வெளியில் வந்தார். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். அதையும்தாண்டி, என்மீது தற்போது ஒரு சிவில் வழக்கை பதிவு செய்து, அதை கிரிமினல் வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஜாமீன் கிடைத்து தற்போது வெளியே வந்திருக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த வழக்கிலிருந்து நிச்சயம் விடுபடுவேன். சி.பி.சி.ஐ.டி போலீஸ் காவலில் நான் இருந்தபோது என்னை யாரும் துன்புறுத்தவில்லை. என்னை மட்டுமல்ல, என்னை சார்ந்த அனைவருமே இந்த வழக்கினால் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெரிய குழுவே கடந்த இரண்டு மாதமாக என்னை சிறையில் வைப்பதற்கான வேலையை செய்துள்ளார்கள். உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த வழக்கை கரூரில் உள்ள யார் செய்ய சொல்லி இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு உறுதுணையாக இருந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், வழக்கறிஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.