ராமேஸ்வரத்திலிருந்து புதன்கிழமை இரவு கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததுடன், ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான விசைப்படகுகள் மீது தங்கள் படகுகளை மோதினர். இதில் விசைபடகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் என்பதை அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வன்முறையை பயன்படுத்தாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் இலங்கையுடன் உச்ச மட்டத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் கூற்றுப்படி, ஜூலை 23-ம் தேதி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. இந்த ஆண்டு இதுவரை 74 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.