சென்னையின் முக்கிய சாலையான வால்டாக்ஸ் சலைக்கும் மின்ட் ஸ்ட்ரீட்டுக்கும்( Mint street) இடையே உள்ள பகுதிதான் பெத்துநாயக்கன் தெரு. இந்த தெருவில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையாக மாடுகளும், சுகாதாரமற்ற குப்பைத் தொட்டியினால் ஏற்படும் சீர்கேடுகளும் உள்ளன.
இந்த தெருவில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் குப்பைத் தொட்டிகளில் உள்ள பொருட்களை உண்பதற்காக கீழே கொட்டுகின்றன. மேலும் அந்த இடத்திலேயே கழிவுகளை மாடுகள் வெளியேற்றுவதால் அந்த தெருவே எப்போதும் ஈரமாக, வழுக்கும் நிலையிலும் துர்நாற்றம் வீசிக் கொண்டேயும் இருக்கின்றன.

இந்த இடத்தை சுத்தம் செய்தாலும், மீண்டும் இதே நிலை தான் தொடர்கிறது, ஏனெனில் மாடுகள் அங்கு தான் ஓய்வு எடுக்கின்றன. இந்த தெருவில் உள்ள 4 குப்பைத் தொட்டிகளை சுற்றியும் இதே நிலை தான் தொடர்கிறது. குப்பைத் தொட்டியை ஒட்டியுள்ள கிளைத் தெருவானது பாதி அடைக்கப்பட்ட நிலையிலே காட்சியளிக்கின்றன.
கடந்த 30-ம் தேதி கூடிய சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல்முறை அபராதம் 10,000 ஆக உயர்த்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகையில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இந்த தெருவிலேயே இந்த அவலநிலை தொடரும்போது, மற்றப்பகுதிகளின் நிலை என்ன என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.






மாடுகளினால் வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் பள்ளி சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய வீடியோவும், திருவொற்றியூரில் ஒரு பெண்மணியை மாடு தாக்கிய வீடியோவும் வெளிவந்த போது மட்டுமே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் இங்கு எப்போதும் இதே நிலை தான் என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அதே போன்று எங்கள் பகுதியிலும் ஒரு வீடியோ வெளிவந்தால் தான் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88