`பாதுகாப்பின்றி சாலையில காத்து கிடக்குறோம்’- புது பேருந்து நிறுத்த கட்டடம் கோரும் கேம்பலாபாத் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியை அடுத்துள்ள ஊர், கேம்பலாபாத். திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் வலது புறம் உள்ள இந்த ஊரில், சுமார் 540 வீடுகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்துவருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தால், கேம்பலாபாத் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

சிறிய கிராமமான கேம்பலாபாத்தில் நான்கு தெருக்கள், இரண்டு கடைகள் மட்டுமே உள்ள. எனவே மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, பள்ளிக்கூடம் செல்வதற்குத் தொடங்கி மளிகைப் பொருள்கள் வாங்குவது வரைக்கும் இந்த ஊர் மக்களுக்கு பொது போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஏற்கெனவே இருந்த கேம்பலாபாத் பேருந்து நிறுத்தம் (பழைய படம்)

இந்த நிலையில், கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அபாய நிலையில் இருப்பதாகக் கூறி, கேம்பலாபாத் ஊரின் ஒரு பக்க பேருந்து நிறுத்தக் கட்டடத்தை அரசு அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

அதே நேரத்தில், சாலையின் மறுபக்கத்தில் அமைந்திருந்த பேருந்து நிறுத்தக் கட்டடத்தை, `சாலை விரிவாக்கப் பணி’ எனக் கூறி, இடித்து அகற்றியிருக்கின்றனர். ஆனால், பல மாதங்களாகியும் இடித்த பேருந்து நிறுத்தங்களுக்கு பதிலாக, புது பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக, கேம்பலாபாத் ஊர் மக்கள் குமுறுகிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கேம்பலாபாத் மக்கள், “எங்கள் ஊர் மக்கள் எல்லா தேவைகளுக்கும் அரசுப் பேருந்து சேவையைத்தான் நம்பியிருக்கிறோம். பிள்ளைகளைப் பக்கத்துக்கு ஊர்களிலுள்ள பள்ளிகளுக்குப் படிக்க அனுப்புவது தொடங்கி, அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்கு வரை பேருந்து சேவை எங்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. எங்கள் ஊரில் அந்தப் பேருந்து நிறுத்தம் இருந்தவரை அரசுப் பேருந்துகள் முறையாக நின்று, எங்களை ஏற்றிக்கொண்டு சென்றன.

பேருந்துக்காக காத்திருப்பு

ஆனால், கடந்த ஆண்டு பேருந்து நிறுத்தங்கள் இடிக்கப்பட்ட பிறகு, அரசுப் பேருந்துகள் முறையாக எங்கள் ஊரில் நிற்பதில்லை. பேருந்து நிறுத்தம் இல்லையென்பதால் எங்கள் ஊரில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. அரசுப் பேருந்துகள் மட்டுமல்ல… தனியார் பேருந்துகள்கூட எங்கள் ஊரில் நிற்பதில்லை.

எங்கள் ஊரில் எட்டாம் வகுப்பு வரையிலான ஒரே ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளி மட்டுமே உள்ளது. மேலும் தொடர்ந்து படிக்கப் பக்கத்து ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பேருந்து வசதி இல்லாத காரணத்தால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகிறார்கள். ஒவ்வொரு முறையும் எங்கள் ஊரைக் கடந்து செல்லும் பேருந்தை நிறுத்தி, ஏறுவது என்பது மிகுந்த சவாலான காரியமாக இருக்கிறது. இருபுறம் இருந்த பேருந்து நிறுத்தங்களையும் வெவ்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அகற்றிவிட்டனர். பேருந்து நிறுத்தம் இல்லாததால், சாலையோரம் நின்று கொண்டு, பேருந்துகளை நிறுத்துமாறு கைகளைக் காட்டி சைகை செய்கிறோம்.

ஆனாலும், சில பேருந்துகள் நிற்காமலேயே சென்று விடுகின்றன. இது தொடர்பாக ஊர் தலைவர் மூலம் பல முயற்சிகளை எடுத்தோம். உள்ளூர் அதிகாரிகள் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்றனர்.

தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு அரசுப் பேருந்து வசதியையே பிரதானமாக நம்பியிருக்கும் கேம்பலாபாத் ஊர் மக்கள், பேருந்து நிறுத்தம் இல்லாததால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவை. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அந்த ஊர் மக்களின் கோரிக்கையினை ஏற்று, பேருந்து நிறுத்தத்தை விரைவாக அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!