`சரியான திட்டமிடல் இல்லை’ தலைவாசல் கால்நடை பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது? – அமைச்சர் விளக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம், தலைவாசலில், கால்நடை பூங்காவை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். சுமார் 1,866 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 1,022 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இதற்கான தொடக்க விழா 2020-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்றது.

மிகப் பிரமாண்டமாக சர்வதேச தரத்துடன், அதிநவீன வசதிகளுடன் இப்பூங்காவை உருவாக்க செயல் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் வகையில் கால்நடைகள் தொடர்பான அனைத்து அம்சங்களும் இங்கு இடம்பெறும் எனவும், குறிப்பாக ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும் எனவும் அப்போதைய அதிமுக அரசு தெரிவித்துள்ளது.

கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் கால்நடை பூங்கா பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த பூங்காவை பயன்பாடுக்கு கொண்டு வராமல் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்து தமது எதிர்ப்பை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில், தலைவாசலில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையப் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு, அதன்பின்னர் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தலைவாசல் கால்நடைப் பூங்காவானது, கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1,866.28 ஏக்கர் பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்காள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், திட்டமிடப்பட்ட 9 வளாகங்களின் கட்டுமானம் மற்றும் மின் இணைப்பு ஆகிய பணிகளை பொறுத்தவரை, திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது 50 சதவீத பணிகள் கூடமுடிந்திருக்கவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன்

சரியானதிட்டமிடல் இருந்திருந்தால் காலதாமதத்தைத் தவிர்த்திருக்கலாம். அவர்கள் ஆட்சியில் சரியான திட்டமிடுதல் இன்றி, அவசரகதியில், மக்கள் வரிப்பணத்தில் அதிக பொருள்செலவில் இந்நிலையத்தை தொடங்கியுள்ளனர்.

தலைவாசல் கால்நடை பூங்கா

கால்நடைப் பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். ஆனால், இந்த நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்துள்ளனர். எனினும், இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து, கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துறை அமைச்சரை தலைவராகவும், தலைமைச் செயலரை துணைத் தலைவராகவும் கொண்ட திட்டகண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்த கம்பிகள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. டான்சி நிறுவனம் மூலம் அறையணிகள் கொள்முதல் முடிக்கப்பட்டு அவற்றை பொருத்தும் பணி நடைபெறுகிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தேவைப்படும் பணியிடங்களை உரிய துறைகள் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு கால்நடை ஆராய்ச்சி நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்று அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.