`சொத்துவரியைத் தொடர்ந்து தொழில்வரியும் உயர்வு; மக்களைக் கசக்கிப் பிழியும் கொடுங்கோன்மை!’ – சீமான்

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று சென்னையில் தொழில் வரியை 35 சதவிகிதமாக உயர்த்துவது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொழில்வரியை 35℅ அளவிற்கு உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. சொத்துவரியைத் தொடர்ந்து தொழில்வரியையும் உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழியும் கொடுங்கோன்மை எவ்வகையிலும் ஏற்புடையதன்று. சென்னை மாநகராட்சி எல்லைப்பகுதிக்குள் வாழும் பொதுமக்கள், அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசின் ஊழியர்கள் என அனைவரும் தங்களின் வருமானத்திற்கேற்ப செலுத்தும் தொழில்வரியை 35 விழுக்காடுவரை உயர்த்தி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்துள்ளதோடு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என அனைத்தையும் உயர்த்தி வாழ முடியாத அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் தாழ்த்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா கால தொழில்முடக்கம், ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுப் பெரும் நட்டத்திற்கு ஆளான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

சீமான் – ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு தொழில்வரியை உயர்த்துவது மீண்டும் அவற்றை முடக்கவே வழிவகுக்கும். சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சியிலும் தொழில்வரியை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சுயதொழில் புரியும் ஏழை எளிய மக்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு தொழில்வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.