தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் நிர்வாகிகளின் கொலைகள்; சாடும் எதிர்க்கட்சிகள் – திணறுகிறதா திமுக அரசு?

அரசியல் படுகொலைகள்..!

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காணவில்லை என்று போலீஸாரால் தேடப்பட்டுவந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டார். இரண்டு மாதங்களைத் தாண்டியும் இதுவரை கொலையாளிகளை காவல்துறையால் நெருங்கவே முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூலை 3-ம் தேதி இரவு 12 மணியளவில் சேலம் அருகில் உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்த அதிமுகவில் பகுதி செயலாளர் சண்முகன் என்பவர் மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் – ஜெயக்குமார்

ஐந்து தனிப்படை வைத்து குற்றவாளிகள் தேடப்பட்டுவந்த நிலையில் சண்முகன் அந்த பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை குறித்து போலீஸில் புகார் சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் என்பவர் கூலிப்படையினர் வைத்து சண்முகனைக் கொலை செய்தது கண்டறியப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி கொஞ்சம் அடங்குவதற்கு முன்பாகவே தலைநகர் சென்னையில் மற்றொரு அரசியல் கொலை நடந்து முடிந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக் கட்டுமான பணியைப் பார்வையிடச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உட்பட இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் விசாரணை வளையம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

இந்த கொலை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் கடந்த ஜூலை 16-ம் தேதி அமைச்சர் பி.டி.ஆர் வீட்டுக்கு அருகில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளராக பொறுப்பு வகித்த பால சுப்பிரமணியன் என்பவரை மர்மநபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.

பால சுப்பிரமணியன்

கடந்த 28-ம் தேதி கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளரான பத்மநாதன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெடிப் படுகொலை செய்தது. அதேபோல, சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் பகுதியில் பாஜக-வை சேர்ந்த செல்வகுமார் கூட்டுறவு அணி மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவர் 27-ம் தேதி இரவு வெடிப் படுகொலை செய்தனர். இந்த கொலைக் குற்றம் தொடர்பாக ஆறு தனிப்படை போலீஸார் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வசந்தகுமார் என்பவரைப் பிடிக்கும்போது வாளால் தாக்கியதால் அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தது போலீஸ். இதேபோல, அன்றைய தினமே, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்உஷாராணியின் கணவர் ஜாக்சன் என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

`சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்!’

இந்த ஜூலை மாதத்தில் மட்டுமே ஐந்துக்கும் மேற்பட்ட அரசியல் நிர்வாகிகள் படுகொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை ஆளும் திமுக அரசு மீது முன்வைத்து வருகிறது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையைத் தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்கப் போதைக் கலாசாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனைக் கொடூரமாகத் தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

அன்புமணி ராமதாஸ்

தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால் எளிதில் வாங்கும் அளவுக்குத் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையைத் தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதைச் செய்ய முடியா விட்டால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்றார்

`தமிழகத்தில் 595 கொலை!’

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டு விட்டது. கொலை நடக்காத நாளே கிடையாது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை தினசரி நடக்கிறது. கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழ்நாடு இன்று கொலை மாநிலமாக மாறியிருக்கிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காத அரசாக உள்ளது. திமுக அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. இனியாவது முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆடுகளை வெட்டுவதுபோல மனிதர்களை வெட்டுகின்ற நிலை மாற வேண்டும். பொதுமக்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, இந்த நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் கஞ்சா போதையில் கொலை அதிகரித்து வருகிறது. இந்த அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒரு திறமை இல்லாத அரசாங்கமாக இந்த திமுக அரசைப் பார்க்க முடிகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். போதையால் பல கொலைகள் தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். இதில் இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

`காவல்துறை ஏவல் துறை!’

பாஜக உறுப்பினர் கொலை செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாடு பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் செல்வகுமார், சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில், தமிழ்நாடு பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது.

அண்ணாமலை

அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.” என்று தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

`இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்!’

தொடர் கொலைகள் நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆளும் திமுக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தொடர் தோல்வியின் விரக்தியில் எடப்பாடி தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது என்று குற்றச்சாட்டை வைக்கிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல. கலை, அறிவுசார் மாநிலம். இன்னும் சொல்லவேண்டும் என்றால், சமூக விரோதிகளைக் களையெடுக்கும் மாநிலம். அவரின் ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையது. ஆனால், இந்த ஆட்சியில் அப்படி எந்த சம்பவங்களும், வன்முறையும் ஆட்சியோடு தொடர்புடைய சம்பவங்களாக நடைபெறவில்லை. கொடநாடு சம்பவம் அன்றைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்தது. அங்கே கொலை, கொள்ளை நடந்தது. முதல்வராக இருந்த எடப்பாடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எனக்குத் தெரியாது, டி.வி-யில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்னார்.

அமைச்சர் ரகுபதி

கடந்த 26 முதல் 28-ம் தேதிகளில் ஐந்து கொலை நடந்ததாகச் சொல்கிறார். அதில் ஒன்று புதுச்சேரியில் நடந்தது. அதனையும் தமிழகத்தின் கணக்கில் எழுதுகிறார் எடப்பாடி. மீதமுள்ள நான்கு சம்பவங்களும் தமிழகத்துக்குத் தொடர்புடையவையல்ல. எல்லாமே சொந்த காரணங்களுக்காக, முன்விரோதத்தில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்கும் அளவுக்கு எந்த சம்பவமும் நடக்கவில்லை. இன்று மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேசமயம், குற்றங்களில் தற்செயலான எண்ணிக்கையில் ஒருசில நேரம் அதிகமாக இருக்கும், குறைவாகவும் இருக்கும். அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது.

நாங்கள் எந்த வகையிலாவது பொறுப்பற்று இருந்தால் நீங்கள் குற்றம் சுமத்தலாம். இருந்தபோதிலும், ஒவ்வொரு குற்றத்துக்கு என்ன முன்விரோதம், என்ன காரணம் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் முதல்வராக நமது முதல்வர் இருக்கிறார். நாட்டிலேயேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பாதுகாக்கும் மாநிலத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையான மாநிலமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88