Thirumavalavan: மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான பேரணி வழக்கு… திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, 2003-ம் ஆண்டு வழக்கில், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2003-ல் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக வி.சி.க சார்பில் திருமாவளவன் தலைமையில் காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில், பொது சொத்துகள் சேதமடைந்ததாக போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

திருமாவளவன்

மேலும், இது தொடர்பான வழக்கை விசாரித்துவந்த மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களுக்கு திருமாவளவன் ஆஜராகாமலிருந்திருக்கிறார். இவ்வாறிருக்க, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.விஜயகுமாரி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும், திருமாவளவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கெதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

திருமாவளவன்

நீதிபதி ஆர்.விஜயகுமாரியின் உத்தரவின்படி, நீதிமன்றத்தில் ஆஜராகாதது மற்றும் மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு வழக்கறிஞர்கள் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வி.சி.க தரப்பு வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்யாதது ஆகியவற்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.