`சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் நாட்டை மேம்படுத்த நினைப்பார்கள்..!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தியாகராசர் கல்லூரி விழாவில்

இந்த விழாவில்  பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “திராவிட மண்ணிலிருந்துதான் நம் பக்தி  இலக்கியங்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது. திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவைகள் கல்வி பயிலாதவர்களுக்கும் பக்தி இயக்கத்தை எடுத்துக்காட்டியது

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக நாடு முழுவதும் திருவாசகம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அழிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாடு உயர்கல்வி, பொருளாதாரத்தில் உலகின் முதன்மையாக இருந்தது.

ஆளுநர் ஆர்.என் ரவி

இப்போது நம் தேசம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் நம்மை மேம்படுத்தும். தமிழகத்தில் அரசின் பங்கு இல்லாமலே பல்வேறு பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டு ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைத்துள்ளது.

சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தையும், நாட்டையும் மேம்படுத்த நினைப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் வணிகநோக்கத்திலயே தொடங்கப்படுகிறது. ஒரு பேராசியர் 30 கல்லூரிகளில் பணியாற்றுவது போன்ற நிலை உள்ளது, இது எப்படி சாத்தியம்? இப்படி இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

திருவாசகம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் தொடர்பான பாடங்கள் பள்ளி, கல்லூரிகளில் இடம்பெற வேண்டும், பகவத்கீதையில் உள்ள ஸ்லோகங்களை நான் படித்துள்ளேன். நமக்கு ஆரம்பக் கல்வியில் நிலையான பாடத்திட்டம் இல்லை. எனவே திருவாசகம் போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கல்வியோடு சேர்ந்து பக்தி இலக்கியங்களும் இருக்க வேண்டும். அது தான் வேர். ஆனால் அந்த வேர் அறுக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், கல்வியோடு இருந்த நிலையில் தவறான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து அரசியல் சூழல் நம் அடிப்படை பாடத்திட்டத்தை மாற்றிவிட்டது. இதனால் நாம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளோம்.

மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நம் தலைமுறைக்கு சொல்லித்தரவில்லை, பிள்ளைகளுக்கு நமது கலாசாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும், வரும் 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் வளர்ச்சியடைய உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளச்சியை பெற உள்ளோம். எழுத்தறிவின்மை இல்லாமல் உலகின் முதன்மை நாடாக இந்தியா இருக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88