`என்னை ராஜினாமா செய்யச் சொல்ல அவர் யார்?” – அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் ஒன்றியக் குழுத் தலைவி

“இரண்டு முறை அமைச்சராகவும், மூன்றுமுறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர், எந்த ஒரு திட்டத்தையும் இங்கு கொண்டு வந்ததில்லை. அப்படிப்பட்டவர் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்..” என்று அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவி பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகருப்பன்

சிங்கம்புணரியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசும்போது, “தமிழக அரசு அனைவருக்குமான அரசு, அனைவரையும் சமமாக பாவிக்கின்றது. இந்த ஊராட்சி ஒன்றயத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக இருப்பதால், பழைய கட்டடத்திலேயே செயல்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அப்படி கட்டப்பட்ட புதிய கட்டட திறப்பு விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பங்கேற்காமல் புறக்கணித்தது வேதனை அளிக்கிறது. ஒருவேளை அவர் தொடர்ந்து இங்கே வராமல் இருக்க உறுதி எடுத்திருப்பதாக கருதுகிறேன்.” என்று பேசிவிட்டுச் சென்றார்.

அமைச்சர் சென்றவுடன் அங்கு வந்த ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா பிரபு, செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் அ.தி.மு.க என்பதால் இந்த யூனியனுக்கு அரசு நிதி எதுவும்  ஒதுக்காமல் புறக்கணிக்கிறது, அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இந்த விழாவை நடத்துகிறார்கள். என்னை  ராஜினாமா செய்யச் சொல்லி அமைச்சர் பேசுகிறார். அவரா என்னை தலைவராக்கினார்… அவருக்கு என்ன உரிமை உள்ளது? இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்த அவர், எந்த ஒரு திட்டத்தையும் இங்கு கொண்டு வந்ததில்லை. அப்படிப்பட்டவர் என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.

பெரியகருப்பன் -திவ்யா

மக்கள் வாக்களித்து இப்பதவிக்கு நான் வந்தேன். மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன். சிங்கம்புணரி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ததாக பில்லில் கையெழுத்து மட்டும்தான் வாங்குகிறார்கள், அந்த நிதியெல்லாம் எங்கே போச்சு என்று தெரியவில்லை. ஆட்சி மாறும்போது காட்சியும் மாறும்” என்றார்.

அமைச்சரும், ஒன்றியக் குழுத் தலைவரும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருவது, சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.