மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து மும்பை செல்லும் மும்பை – ஹவுரா பயணிகள் ரயில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் அதிகாலை 3:45 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழந்தன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்துவரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இன்று அதிகாலை மற்றொரு பயங்கர ரயில் விபத்து நிகழந்திருக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் ஹவுரா-மும்பை மெயில் தடம் புரண்டதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள். நான் கடுமையாகவே கேட்கிறேன்… இதுதான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்து மரணங்களும், பலருக்கு காயங்களும் முடிவில்லாமல் தொடர்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? இந்திய அரசின் அடாவடித்தனத்திற்கு, அரசின் மெத்தனப் போக்கிற்கு முடிவு கிடையாதா? உயிரிழந்தவர்களின் குடும்பங்களுகக்கு இரங்கல்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.