`அதில் நானும் ஒருவனாய் இருப்பேன்!’ – அமீர் கருத்தும் தவெக – நாதக கூட்டணி வாய்ப்பும்?!

`அரசியலில் விஜய்யும் சீமானும் இணைந்து செயல்படப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நடந்தால் அவர்களுடன் நானும் இருப்பேன்’ என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்திருப்பது மீண்டும் த.வெ.க-நா.த.க கூட்டணிக்கான யூகங்களை மேலும் அதிகரித்திருக்கிறது.

திருச்சியில் தனியார் உணவகம் ஒன்றை திறந்துவைக்க வந்த இயக்குநர் அமீரிடம் பத்திரிகையாளர்கள் `விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் அவருக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா?’ என கேட்க அதற்கு அமீர் “நான் வாழ்த்து சொல்லிவிட்டேன். அவர் கூப்பிட்டார் என்றால் நான் போவேன்” என்று தடாலடியாகப் பதிலளித்தார்.

தொடர்ந்து, `உங்கள் நண்பர் சீமானும் அரசியலில் இருக்கிறார், அவருடன் இணைந்து செயல்படுவீர்களா? விஜய்யுடன் இணைந்து செயல்படுவீர்களா?’ என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, “அவர்கள் இரண்டு பேருமே இணைந்து செயல்படப்போவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் சந்தோஷம் தானே. அதில் நானும் ஒருவனாய் இருப்பேன்!” என சிரித்தபடியே தெரிவித்திருக்கிறார். இது பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், உண்மையில் விஜய் – சீமான் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர்கள் அளித்துவரும் பதில்களிலிருந்தே விடை தேடினோம்.

சீமான் – விஜய்

விஜய்யுடன் கூட்டணிக்கு விரும்பும் சீமான்:

விஜய் கட்சி ஆரம்பிக்காதற்கு முன்பே கடந்த ஆண்டு சீமானிடம் பத்திரிகையாளர்கள், `2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் விஜய் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், “அதை என் தம்பியிடம் தான் கேட்கவேண்டும்” என பதிலளித்தார். மேலும், “முதலில் தம்பி விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும், அவரின் கொள்கை கோட்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும். அப்படி சொல்லும்போது ஒத்தக் கருத்து இருந்தால் இணைந்து பயணிக்கலாம்!” என்று சூசமாகத் தெரிவித்தார்.

பின்னர் விஜய் தனிக்கட்சி அறிவிப்பு வெளியான பிறகு, `நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தொடக்க விழா மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் செல்வீர்களா?’ என பத்திரிகையாளர்கள் சீமானிடம் கேட்டதற்கு, `போவேன். போய்…பங்கேற்பேன்’ என சீமான் அதிரடியாகப் பதிலளித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையுமா? இருவரும் சேருவீர்களா என்ற கேள்விக்கு, “என் தம்பி சொன்னதையே நான் சொல்லட்டா…`ஐயம் வெயிட்டிங்!” என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

விஜய் – சீமான்

அதேபோல, நடந்தமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, `இதுவரை தனித்துப் போட்டியிட்டு வருகிறீர்கள். இப்போது விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இதையெல்லாம் முடிவு செய்யவேண்டியது தம்பி விஜய்தான். நான் தான் அவரைவிட 8 வயது பெரியவன். நான் அண்ணன்; அவர் என் தம்பி. அண்ணனுடன் செல்வோம், அவருடன் நிற்போம் என்று விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்!” என பதிலளித்தார். மேலும், `விஜய் உங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட முன்வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?’ என்ற கேட்டதற்கு, “என் தம்பி என்னோடு வருகிறார் என்பதைவிட எனக்கென்ன பெரிய மகிழ்ச்சியும் பெருமையும் இருக்கப்போகிறது… சேர்த்துக்கொள்வேன். சேர்ந்தே நிற்போம்!” என உறுதியாகத் தெரிவித்தார்.

விஜய் – சீமான்

தொடர்ந்து தொகுதி வாரியாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விஜய் கல்வி ஊக்கத்தொகை கொடுக்கும் நிகழ்ச்சியைப் பாராட்டிய சீமான், “பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என நெகிழ்ந்தார்.

ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளின்போது, “காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டு விஜய்யை உச்சி முகர்ந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்

விஜய்யின் பதில் என்னவாக இருக்கும்?

ஒரு பக்கம் சீமான் எல்லா வகையிலும் விஜய்யுடனான கூட்டணிக்கான சிக்னல் கொடுத்துவரும் நிலையில் விஜய்யின் பதிலுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலின்போது சீமானின் நா.த.க மைக் சின்னத்தில் போட்டியிட, தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் ஆதரவு யாருக்காக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. அப்போது வெளியான விஜய்யின் அடுத்த படமான `கோட்’ படத்தின் `விசில் போடு’ பாடல் போஸ்டரில் `மைக்’ இடம்பெற்றிருந்ததையும், `கேம்ப்பைனை திறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?’ என்று பாடல் வரிகள் இடம்பெற்றிருந்ததைவும் குறிப்பிட்டு சீமானின் நாம் தமிழர் கட்சியினர் `விஜய்யின் ஆதரவு எங்களுக்குத்தான்!’ என கொக்கரித்தனர்.

`கோட்’ படத்தின் `விசிப் போடு’ பாடல் போஸ்டரில் `மைக்

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவில், முதல்முறையாக 8% வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட அதற்கு சீமான், “உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என கணிவுடன் நன்றி தெரிவித்தார்.

அதேபோல, கடந்த மாதம் விஜய் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பெயர்களுக்கு முன்பாக சாதாரணமாகவும் `மதிப்பிற்கு உரிய, அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய’ என்று முன்னொட்டைச் சேர்த்த விஜய், சீமானின் பெயருக்கு முன்பாக மட்டும் `நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான்’ என்று தனித்துக்காட்டி நன்றி தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

அந்த நிலையில், `சீமானுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் பத்திரிகையாளர்கள் கேட்க, “எதுவாக இருந்தாலும் எங்கள் தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியே அறிவிப்பார்!” என்று பதிலளித்தார். இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “விரைவில் நடைபெறவிருக்கும் த.வெ.க மாநாட்டில் விஜய் ஒருவேளை சீமானுக்கு அழைப்பு விடுக்கும்பட்சத்திலோ, அல்லது தனது லெட்டர் பேடில் `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனத் தெரிவித்திருப்பதை அடியொற்றி தமிழ், தமிழர் நலன், தமிழ்த்தேசிய அரசியலை மையப்படுத்தி கொள்கை கோட்பாடுகளை அறிவித்தாலோதான் கூட்டணியை உறுதியாக எதிர்பார்க்க முடியும். அதுவும் 2026 தேர்தல் சமயத்தில்தான் விஜய் தனித்துப் போட்டியாக, மெகா கூட்டணியா, அப்படி கூட்டணி என்றால் யார் தலைமையில் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட், தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? எனப் பல கட்டங்கள், பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அதற்கான விடை விஜய்யின் முதல் மாநாட்டில் அவரின் முதல் அரசியல் உரையின்போதுதான் தெரியவரும்!” என்கின்றனர்.

சீமான் Waiting… விஜய்யின் பதில் Coming soon!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88