Maharashtra: சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்! – அதிருப்தியில் ஷிண்டே சிவசேனா?

மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், 2023-ம் பிப்ரவரி 18-ம் தேதி மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ரமேஷ் பயாஸ் பதவிக்காலம் வரும் 28-ம் தேதி முடிவடைகிறது. ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். சில மாநிலங்களில் 5 ஆண்டுகளை கடந்த பிறகும் ஆளுநர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவிற்கு தற்போது ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுராக பதவியேற்க இருக்கிறார். இதற்கு முன்பு ஆளுநராக இருந்த பகத் சிங் கொஷாரியா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதோடு, எப்போதும் தனது பெயர் மீடியாவில் வரும்படி பார்த்துக்கொண்டார்.

ரமேஷ் பயாஸ்

அதோடு நலத்திட்டங்கள் உதவிகள் செய்வதில் கொஷாரியா முன்னின்று நடத்தினார். இதே போன்று ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த சங்கரநாராயணன் 2010-ம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள் மகாராஷ்டிராவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சங்கரநாராயணன் மற்றும் ரமேஷ் பயாஸ் எந்த வித சர்ச்சையிலும் சிக்காத நிலையில், கொஷாரியா தொடர் சர்ச்சையில் சிக்கி வந்தார். தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை வெற்றி பெற்றவர் ஆவார். கடைசியாக மும்பையில் பா.ஜ.க தமிழர்கள் பொங்கல் விழா நடத்திய போது அதிலும் கலந்து கொண்டார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

ஆளுநர் நியமனத்தில் தனது கட்சியை சேர்ந்த யாருக்கும் ஆளுநர் பதவி கொடுக்காதது குறித்து சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையிலும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில், தனது கட்சியை சேர்ந்த ஒருவருக்கு ஆளுநர் பதவியாவது கிடைக்கும் என்று ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதிலும் பிரதிநித்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க சபாநாயகர் ஹரிபாபு ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று நிதி ஆயோக்கிலும் சிவசேனாவிற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின்போது சிவசேனா தொடர்ந்து பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால் தொகுதிப் பங்கீடு முடிவடைய அதிக கால அவகாசம் எடுத்துக்கொண்டதால் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சிவசேனா மீது பா.ஜ.க அதிருப்தியில் இருக்கிறது.