யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடிப்பு; சொகுசு வாழ்க்கை.. தாய், தந்தையுடன் இளைஞர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திங்களூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி மர்மக் கும்பல் கடைகளில் 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருள்களை வாங்கி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திங்களூர் போலீஸார் சந்தையில் கூடும் வியாபாரிகளிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். முதியவர் கொடுத்த பணத்தை பார்த்து சந்தேகமடைந்த வியாபாரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீஸார் முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியைச் சேர்ந்த ஜெயபால் (70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளதும் தெரியவந்தது. அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில், கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுறச் சந்தைகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கைதானவர்கள்

இதையடுத்து, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரையும் திங்களூர் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் இயந்திரம், ரூ.2.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.